சட்டம் - ஒழுங்கு நிலவரம்: காவல் துறை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் 3-வது நாளாக ஆலோசனை
சென்னை: தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, முதலமைச்சர் ஜோசப் விஜய், தொடர்ந்து மூன்றாவது நாளாக காவல் துறை உயர் அதிகாரிகளுடன் இன்றும் ஆலோசனை நடத்தினார்.
தீபாவளி பண்டிகையன்று ஒரே நாளில் 11 கொலைச் சம்பவங்கள் நடைபெற்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சாய் குமார், உள்துறைச் செயலாளர் கார்த்திக், காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால், உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க், சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.முன்னதாக, தீபாவளி பண்டிகை நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் 11 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசு மீது விமர்சனங்களை முன்வைத்தன.
இதையடுத்து, தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம், அண்மையில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள், அவற்றைத் தடுப்பதற்காக காவல் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைப் பராமரிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆளுநர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரைச் சந்திக்க இருப்பதும், மறுபுறம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடர்ந்து மூன்றாவது நாளாக காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பதும் தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழ்நாடு ஆளுநரிடம் அறிக்கை கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்தச் சூழலில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், நாளை டெல்லி செல்ல உள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் தற்போதைய சட்டம், ஒழுங்கு நிலவரம் மற்றும் அண்மையில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஆளுநர் எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0