நூலகக் கொள்முதல் ஊழல் விவகாரம்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
மதுரை: பெரியார் அறிவுலக நூலகக் கொள்முதல் விவகாரத்தில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.
கோயம்புத்தூரில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்திற்கு ’அகல் விளக்கு’ என்ற பதிப்பகத்தில் இருந்து பல லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வழக்கமாக 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களின் விலை சுமார் ரூ.1,395 கொடுத்து வாங்கி இருப்பதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய, அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் அகற்றப்பட்டன. இந்த விவகாரத்தை எழுத்தாளர் பெருமாள் முருகன் உள்ளிட்டோர் பொதுவெளியில் எழுப்பியதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரிக்கை விடுத்தன.புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பான புகார் குறித்து வழக்குப்பதிவுச் செய்து லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியுமான சு.வெங்கடேசன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், "பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்" என்று நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் "மகா பெரியவர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசிய காணொளியையும் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0