அம்பை இடைத்தேர்தலில் சீமானுக்கு அதிமுக ஆதரவா? திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த 'அப்டேட்'
மதுரை
: அம்பாசமுத்திரம் இடைத் தேர்தலில் பொது வேட்பாளராக சீமான் நிறுத்தப்பட்டால், அதிமுக ஆதரிக்குமா என்ற கேள்விக்கு அக் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் சூசகமாக பதில் அளித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த 13.5 கிலோ எடையுள்ள தங்கக் கவசம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை அண்ணா நகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இன்று மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனா ஆகியோர் தங்கக் கவசத்தை வங்கியில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் திருப்பரங்குன்றம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது திண்டுக்கல் சீனிவாசன், "அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் அனைவரும் தேர்தல் பணிகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தீவிரமாகப் பாடுபட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வழக்கம்போல சிறப்பாக நடைபெற்றது. அதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. கட்சியிலிருந்து மூன்று பேர் வெளியேறியதால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அதனை மதுராந்தகம், தாராபுரம் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.
முதலமைச்சர் விஜய் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 100 கி.மீ. தூரம் ரோடு ஷோ சென்றாலும் வெற்றி கிடைக்காது. இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும். ஒரு பைசா கூட பணம் கொடுக்காமல் வெற்றி பெறுவோம்.
தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்களில் டிபன் பாக்ஸில் வைத்து ரூ.500 கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர். தவெக கடந்த தேர்தலைவிட இந்த முறை குறைவான வாக்கு சதவீதத்தையே பெற்றுள்ளது. கூட்டணியின் காரணமாகவே அந்த வெற்றி கிடைத்துள்ளது.
"விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அதிருப்தி"
தவெக ஆட்சி அமைந்தவுடன் மக்களுக்கான வசதிகளை 6 மாதங்களில் பிரமாதமாக செய்து காட்டுவோம் என்று கூறினார்கள். ஆனால், அரிசி விலை உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கவில்லை. விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவற்றால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.விஜய் தான் அடுத்த 15 ஆண்டுகளுக்கு முதலமைச்சராக இருப்பார் என்று அமைச்சர்கள் கூறுவது பகல் கனவு. அது நிச்சயம் நடக்காது. ஐந்து ஆண்டுகள் கூட இந்த ஆட்சி நீடிக்காது. இன்னும் ஆறு மாதங்களில் ஆட்சியின் நிலை என்ன என்பது தெரிந்துவிடும்.
"எதிர்க்கட்சிகளின் 65 சதவீத வாக்குகளை ஒருங்கிணைப்போம்"
ஆளுங்கட்சிக்கு எதிராக 65 சதவீத வாக்குகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவற்றை ஒருங்கிணைத்தால் தான் வெற்றி பெற முடியும். ஆளுங்கட்சிக்கு 35 சதவீத ஆதரவு மட்டுமே உள்ளது. எதிர்க்கட்சிகளிடம் உள்ள 65 சதவீத வாக்குகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நேரத்தில் உரிய வியூகம் வகுப்பார்.அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் வியூகம் அமைக்க வேண்டும் என்பது தான் எங்களது கருத்து. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து பொதுச்செயலாளர் முடிவெடுப்பார். தேர்தல் தோல்விகளைப் பொறுத்தவரை, அதிமுக தனது தேர்தல் வியூகங்களை மாற்றியமைத்து வெற்றி பெறுவதற்கான சூழலை உருவாக்கும்" என்றார்.
"சீமானை பொதுவேட்பாளராக அறிவிப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு"
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானை பொதுவேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, "திமுக எத்தகைய நிலைப்பாட்டை கொண்டுள்ளதோ அதே போன்ற நிலைப்பாட்டில் தான் அதிமுகவும் உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அதுகுறித்து முடிவு செய்து பேசுவோம்" என்றார்.
"திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பே அதிமுகவின் நிலைப்பாடு"
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, "நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் எங்களது நிலைப்பாடு" என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0