ஜிஎஸ்டி வருவாய் குறைவுக்கு முந்தைய திமுக ஆட்சியே காரணம் - அமைச்சர் நிர்மல்குமார் விமர்சனம்
சென்னை: ஜிஎஸ்டி வருவாய் குறைவுக்கு முந்தைய திமுகவின் ஆட்சியே காரணம் என அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்துள்ளார்.
முரசு புயலை எதிர்கொள்ளும் ஆந்திர மாநிலத்திற்கு உதவும் வகையில், தமிழ்நாடு மின்சாரத்துறையின் சார்பாக 500 மின் பணியாளர்கள் கொண்ட சிறப்புக் குழு சென்னையில் இருந்து (நவம்பர் 2) புறப்பட்டது. மின்சார சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்னை மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட 25 குழுக்களை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கொடியசைத்து ஆந்திராவுக்கு அனுப்பி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், “ஆந்திராவில் புயல் காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதலமைச்சர் விஜய்யை தொடர்பு கொண்டு மின்சாரத் துறை சார்ந்த உதவிகளை கோரினார்.
ஆந்திர மாநில மின்சாரத் துறை அமைச்சரும் என்னிடம் தொலைபேசியில் பேசினார். இதையடுத்து, ஏற்கெனவே தயாராக வைத்திருந்த சிறப்புக் குழுக்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகளை முழுமையாக முடித்த பின்னர் அவர்கள் தமிழகம் திரும்புவார்கள்.
மேலும், தமிழகத்திலும் மின்சாரப் பாதிப்புகள் ஏற்பட்டால் அவற்றை சரிசெய்ய தேவையான பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்த நடவடிக்கை இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும்” என தெரிவித்தார்.மின்சாரக் கொள்முதல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “மின்சார கொள்முதல் தொடர்பாகத் தவறான செய்திகள் அதிகளவில் வெளியிடப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான மின்சாரத் திட்டங்கள் தயாராகி வருகிறது. சோலார் மின்சார பேட்டரி சேமிப்புக் கலன் திட்டம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும். அதற்கான அரசாணை போடப்பட்டுள்ளது” என்றார்.ஜிஎஸ்டி வருவாய் - திமுகவே காரணம்
தொடர்ந்து, ஜிஎஸ்டி வருவாயில் தமிழ்நாடு சரிந்து விட்டதாக எழுத விமர்சனம் குறித்து கேட்ட போது பதில் அளித்த அவர், “2024–2025ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வளர்ச்சி இதைவிட அதிகமாகக் குறைந்திருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தவறான ஆட்சியின் காரணமாகவே ஜிஎஸ்டி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களில் ஏற்பட்டது கிடையாது. கடந்த காலங்களில் பல நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்குச் சென்று விட்டன. ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என கூறினார்.
மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தபோது மின்தடை ஏற்பட்ட விவகாரம் தொடர்பாகப் பேசிய அமைச்சர், கோயில் அதிகாரி ஒருவர் மட்டுமே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது போன்ற சூழலில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்குவதே நடைமுறை என்றும், கோயிலில் சரியான முறையில்தான் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0