தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்: அடித்து சொன்ன சி.பி.ராதாகிருஷ்ணன்
மதுரை: குஜராத், கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் எல்லாம் பிரதமராகும்போது, தமிழர் ஒருவர் எதிர்காலத்தில் நிச்சயமாக பிரதமர் ஆவார் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முத்துராமலிங்க தேவர் குருபூஜை, காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மதுரை வருகை தந்தார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன்னுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, முத்துராமலிங்க தேவரின் உறவினர்களை சந்தித்து பேசினார்.
பிறகு அங்கிருந்தவாறே திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் அவர் சென்றார். பின்னர் மீண்டும் மதுரை திரும்பிய சி.பி.ராதாகிருஷ்ணன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வந்தார்.
அப்போது, கோயில் நிர்வாகம் சார்பாக அவருக்கு பரிவட்டம் மரியாதை அளிக்கப்பட்டது. கோயில் அறங்காவலர் ருக்மணி பழனிவேல் ராஜன் தலைமையிலான அறங்காவலர் குழுவும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் உடனிருந்து அவரை வரவேற்றனர்.
தரிசனம் முடித்துவிட்டு செய்தியாளர்களை சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மதுரை மக்களுக்காகவும், தமிழக மக்களுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் மனமார மீனாட்சி அம்மனிடம் பிரார்த்தனை செய்தேன். மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் தான். மதுரை மக்கள் அனைவரும் இணைந்து மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை மிகச் சிறப்பாக நடத்தியுள்ளனர்" எனக் கூறினார்.
'தமிழர் பிரதமர் ஆவார்'
அப்போது, தமிழ்நாட்டை சேர்ந்தவர் இந்தியாவின் பிரதமர் ஆக முடியுமா? என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "தமிழர் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த யாராக இருந்தாலும் அவர் பாரத பிரதமர் ஆக முடியும். அதற்கு ஜனநாயகம் வழிவகை செய்துள்ளது.
கர்நாடகா, குஜராத்தை சேர்ந்த தலைவர்கள் எல்லாம் பிரதமராக வந்துள்ளனர். அதேபோல், எதிர்காலத்தில் ஒருநாள் தமிழர் ஒருவரும் நிச்சயம் பிரதமர் ஆவார். உலகின் முதன்மை வல்லரசு நாடாக இந்தியா மாறுவதை உலகத்தின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.நிச்சயமாக மகத்தான நாடாக, எல்லோருக்கும் வழிகாட்டும் நாடாக இந்தியா உருவெடுக்கும். உலக மக்கள் அனைவரையும் அரவணைத்து செல்லும் நாடாக இந்தியா உருவாகும். இந்தியா இன்று உலக நாடுகளில் நான்காவது வல்லரசாக இருக்கிறது. இனி உலகின் முதல் வல்லரசாக மாறும்" என்றார்.
மீனாட்சி அம்மன் கோயிலில் தொடரும் மின்வெட்டு
முன்னதாக, கோயிலுக்குள் சி.பி.ராதாகிருஷ்ணன் சென்றபோது இரண்டு முறை 10 வினாடிகளுக்கு மின்தடை ஏற்பட்டது. பின்னர் தரிசனம் முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தபோது மீண்டும் 10 வினாடிகள் மின்தடை ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
நேற்றைய தினம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் மேற்கொள்ளும் போதும், இதுபோன்று மின்தடை ஏற்பட்டது.
அதுகுறித்து இன்று காலை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் கேட்டபோது, ஜெனரேட்டர் மூலமாக மின் சப்ளை கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று மின்சாரத்திற்கு மாற்றம் செய்தபோது இந்த தடை நேர்ந்ததாகவும், இனி அவ்வாறு நடக்காது என்றும் பத்திரிகையாளர்களிடம் உறுதி அளித்திருந்தார்.
ஆனால் இன்று குடியரசு துணைத் தலைவர் வந்த நேரத்திலும் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, "குடியரசு துணைத் தலைவர் மாலை 5.35 மணிக்கு உள்ளே நுழைந்தார். தரிசனத்திற்குப் பிறகு மாலை 6.25 மணிக்கு வெளியேறினார்.
அவரது வருகையின் காரணமாக, பிற்பகல் 3.30 மணி முதல் கோயிலுக்குள் முழுவதுமாக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டிருந்தன. மேலும் உதவிக்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவிப் பொறியாளர் (TNEB AEE) கோவில் மின் நிலையத்தில் இருந்தார்.
தரிசனத்திற்குப் பிறகு, துணை ஜனாதிபதி கிழக்கு கோபுரத்தின் முன்பு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது, கோவில் மின் நிலையத்தில் ஏற்பட்ட உள் கோளாறு காரணமாக கோவிலுக்குள் மின் விநியோகம் தடைபட்டது" என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0