போக்குவரத்து கழகத்தில் கூடுதல் கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க இடைக்காலத் தடை
மதுரை: கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில், கூடுதல் கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வகை செய்யும் சுற்றறிக்கைக்கு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில், கூடுதல் கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் சுற்றறிக்கைக்கு எதிராக, சிவகங்கை கீழடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "நான், கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் காரைக்குடி மண்டலத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறேன். எனக்கு அடுத்த பதவி உயர்வு, கண்காணிப்பாளர் பணியிடம் என்று இருந்தது.இந்த நிலையில், கூடுதல் கல்வித் தகுதி பெற்ற உதவியாளர்களுக்கு, கண்காணிப்பாளர் மற்றும் மூத்த கண்காணிப்பாளர் பதவி வழங்குவதற்காக, கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி, தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதனால் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெற வேண்டிய மூத்த பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே, இதுபோன்ற சுற்றறிக்கை வெளியாகி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, திரும்பப் பெறப்பட்ட நிலையில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்திட வேண்டும். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்குக்கும் இடைக்காலத் தடை விதித்து, பணிமூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, "தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிய நடைமுறைகளின்படி பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். எனவே, அரசு சார்பில் செப்டம்பர் 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0