மடாதிபதியை நியமிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை - நீதிமன்றம் அதிரடி கருத்து
மதுரை: ஶ்ரீரங்கம் ஜீயர் மடத்தின் ஜீயரை விரைவில் நியமிக்கவில்லை எனில் நீதிமன்றம் தலையிடத் தயங்காது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்தின் ஜீயரை விரைவில் நியமிக்க உத்தரவிட வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், "ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்தில் 6 மாதங்களில் ஜீயர் நியமனம் செய்யப்படுவார்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்தின் 50-வது ஜீயர் 1989-ம் ஆண்டில் பதவியேற்றார். அவர் 2018-இல் காலமானார். அவர் அடுத்த வாரிசை நியமிக்கவில்லை. மடத்தின் வழக்கப்படி அடுத்த ஜீயரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கோயிலின் 'ஸ்தலத்தார்'களுக்கு உண்டு. இந்தத் தேர்வு ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையிலோ நடைபெறும்.
ஜீயர் நியமனம் என்பது முற்றிலும் ஒரு மதம் சார்ந்த நிகழ்வாகும். இதை நிர்வாகரீதியான செயலாக கருத முடியாது. மடாதிபதியை நியமிக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
மடாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ‘ஸ்தலத்தார்’களுக்கே உரியது. ஸ்தலத்தார்கள் இந்த கடமையை நிறைவேற்றத் தவறினால் நீதிமன்றம் தலையிட தயங்காது. இப்பணிக்காக மற்றொரு அமைப்பின் உதவியை நாடக்கூடும்.இதற்காக சில புகழ்பெற்ற வைஷ்ணவ சான்றோர்களை மனதில் வைத்துள்ளோம். 'ஸ்தலத்தார்' தங்கள் பொறுப்பைச் சரியாக நிறைவேற்றத் தவறினால், அந்தச் சான்றோர்களின் சேவை பெறப்படும்" என்று தெரிவித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0