பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா: மதுரையில் குவிந்த அரசியல் கட்சித் தலைவர்கள்
மதுரை: கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், மு.க.ஸ்டாலின், வைகோ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64-ஆவது குருபூஜையை இன்று (அக்டோபர் 30) கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், அமைச்சர்கள் ராஜீவ், மதன் ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பி.வி. கதிரவன், வி.கே. சசிகலா நடராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அமைச்சர் ராஜேஷ்குமார் செய்தியாளர் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து, முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், பின்னர் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நெய்யாற்றில் நுரை பொங்குவதற்கு ஷாம்பு, சோப்பு போன்றவற்றின் கழிவுகளே காரணம் என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளாரே, அது உண்மையா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜேஷ்குமார், ஆற்றில் நுரை பொங்குவது தொடர்பாக, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அந்தந்த மாவட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் என்னென்ன? என்பதை நேரில் ஆய்வு செய்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.அவரிடம், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து கேட்டதற்கு, நிச்சயமாகக் கட்சி வளர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்தார். 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 59 ஆண்டுகள் கழித்து கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்றுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.மேலும், ஒவ்வொரு 10 வாக்குச்சாவடிகளுக்கும் ஒரு தலைவர் நியமிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். வரும் காலங்களில் கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ராஜேஷ்குமார் கூறினார்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்புமதுரையில் முத்துராம லிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதி வரை முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். நாட்டின் விடுதலைக்காக எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். 1973ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 50 ஆண்டுகளாக நான் தேவை ஜெயந்தி அன்று நான் பசும்பொன்னிற்கு சென்று வருகிறேன்.
தென்நாட்டு மக்கள் சாதி, சமய பூசல்களுக்கு இடம்கொடுக்காமல் ஒற்றுமையாக வாழ்வது தான் முத்துராமலிங்க தேவருக்கு நாம் செலுத்தும் வீரவணக்கமாகும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘தமிழ்நாட்டின் சிங்கம்; பசும்பொன்னின் தங்கம்’ என தேவர் சிலைக்கு வைகோ புகழஞ்சலி செலுத்தினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0