மதுரை மேலூர் அருகே காணாமல் போன சிறுவன் பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்பு - போலீஸ் தீவிர விசாரணை

Oct 26, 2026 - 22:52
 1
மதுரை மேலூர் அருகே காணாமல் போன சிறுவன் பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்பு - போலீஸ் தீவிர விசாரணை

மதுரை: வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாயமான நிலையில், அடுத்த நாள் பாழடைந்த ஓட்டு வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன். இவரது மனைவி சத்யா. பெரியகருப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் முத்துச்செல்வம் என்ற 7 வயது ஆண் குழந்தையுடன் தனியாமங்கலத்தில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவரின் 7 வயது மகன், தனியாமங்கலம் அருகே வெள்ளலூரில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
விளையாட சென்ற சிறுவன் மாயம்
இந்நிலையில்,  (அக்.25) விடுமுறை தினம் என்பதால், காலை 11 மணியளவில் வீட்டின் அருகே விளையாட செல்வதாகக் கூறிவிட்டு சிறுவன் வெளியே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பல்வேறு இடங்களில் சிறுவனைத் தேடினர்.
இதனையடுத்து, சிறுவன் காணாமல் போனது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், போலீசாரின் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, இன்று 20-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு, சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட தயாராக இருந்தனர்.
அப்போது, அதே பகுதியில் உள்ள பாழடைந்த ஓட்டு வீட்டிற்குள் சிறுவன் முத்துச்செல்வம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது.சிறுவன் சடலமாக மீட்பு
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவன் உயிரிழந்ததற்கான காரணம் என்ன? அவர் பாழடைந்த வீட்டிற்குள் சென்றது எப்படி? சிறுவனின் மரணத்தில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மதுரை மாவட்டக் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் மேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் போலீசார்ர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிறுவனின் உடற்கூராய்வு முடிவுகள் கிடைத்த பின்னரே அவரது மரணத்துக்கான காரணம் குறித்து உறுதியான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0