“காங்கிரஸ் தயவில்தான் திமுக 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது” - அமைச்சர் பெ.விஸ்வாநாதன்

Oct 28, 2026 - 22:49
 1
“காங்கிரஸ் தயவில்தான் திமுக 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது” - அமைச்சர் பெ.விஸ்வாநாதன்

மதுரை:29

‘‘காங்கிரஸ் தயவில்தான் திமுக 57 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற்றுள்ளது’’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்தார். 

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் ரூ.1.21 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியது: “கடந்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் திமுக தனித்து தேர்தலை சந்தித்து தோல்வியைத் தழுவியது. இப்படி திமுக தோல்வியை சந்தித்த பல உதாரணங்களையும், வரலாற்றையும் காங்கிரஸ் சொல்லும். 

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தயவில்தான் திமுகவின் 57 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். 

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இணைந்து தேர்தலை சந்திக்கவில்லை என்றால், திமுகவுக்கு இப்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கூட கிடைத்திருக்காது.

நாங்கள் யார் உழைப்பிலும் வெற்றி பெறவில்லை. எங்கள் உழைப்பில்தான் திமுக வெற்றி பெற்றது. திமுக, உழைப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என அவர்கள் காலம் காலமாக கூறி வருகின்றனர். இனி அவர்கள் அப்படி வாயே திறக்கக் கூடாது என்பதற்காகத்தான் தவெகவோடு நாங்கள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளோம். 

முன்பெல்லாம், காங்கிரஸை பார்த்து திமுகவினர் கூறும்போது, "உங்க ஊர்ல ஐந்து பேர் இருப்பார்களா? உங்களை எல்லாம் சேர்த்து ஒரு சாக்குப்பையில் கட்டிடலாமா? ஊருக்கு நாலு பேரு வைத்திருக்கும் இவர்களெல்லாம் ஒரு கட்சி” என ஏளனமாகக் கூறினர்.

ஆனால், தமிழக வரலாற்றிலேயே 59 ஆண்டுகளுக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அமைச்சரவை வாய்ப்பை முதல்வர் விஜய் வழங்கியுள்ளார். அவினாசிலிங்கம் செட்டியார் கல்வித் துறையின் அமைச்சராக இருந்தார். பெருந்தலைவர் காமராஜர் காலம், பெரியவர் பக்தவத்சலம் காலத்தில் சி.சுப்பிரமணியம் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார்.

அவர்கள் இருவருக்குப் பின்னர், நான் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உயர்கல்வித் துறை அமைச்சராக ஆகியுள்ளேன். இதை பொறுக்க முடியாதவர்கள் தான் இன்று பழைய  நடைமுறையை எடுத்துக்கொண்டு அரசியலை பேசுகின்றனர்.

எனது ஜீவன் இருக்கும் வரை ஒரு பைசா லஞ்சம் வாங்காத நிர்வாகத்தை இந்த மக்களுக்கு வழங்குவேன். இதை எந்த திமுக முன்னாள் அமைச்சர்களும் கூற தைரியம் உள்ளதா?

உங்கள் சொத்துகளெல்லாம் எங்கிருந்து வந்தது. மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து சம்பாதித்துள்ளீர்கள்.  இதை நான் எங்கு வேண்டுமானாலும் தைரியமாகச் சொல்வேன். ஏனென்றால் நான் சுத்தமானவன், நெருப்பானவன்.  

நான் மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளிப்பேனே தவிர, தோற்றுப்போனவர்களின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும் நிலையில் காங்கிரஸ் பேரியக்கம் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0