அறங்காவலர் விண்ணப்ப விவரங்களை பொதுவெளியில் வைப்பதில் ஏன் தயக்கம்? நீதிமன்றம் கேள்வி
மதுரை
அறங்காவலர் பதவிக்கான விண்ணப்ப விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வகையில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி சேர்த்த ராம்குமார் ஆதித்யன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "கோயில்களில் எவ்விதமான பின்புலமும் இன்றி சரியான நபர்கள் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்படுவது மிகவும் அவசியமானது. எனவே, கோயில்களில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் அதனோடு இணைக்கப்பட்ட ஆவணங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அறங்காவலராக ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்கவும், அறங்காவலர் நியமன உத்தரவுகளை இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட கோயில் இணையதளத்திலும் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.
மேலும் அறங்காவலர் நியமன உத்தரவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு காலக்கெடுவை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், முருகன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அறநிலையத்துறை சார்பில், "அறங்காவலர்கள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய விதிகளில் இடம் இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "அறங்காவலர்கள் கோயில் பணத்தை சொத்தை நகைகளை அபகரித்ததாக செய்திகள் உள்ளன. கோயில் சொத்துக்களை கூட விற்பனை செய்துள்ளனர். அதனால் அறங்காவலர் தேர்வு நேர்மையாக நடைபெற வெளிப்படைத்தன்மை வேண்டும். அந்த விண்ணப்பங்கள் மக்கள் பார்வைக்கு பொதுவெளியில் இருந்தால் தான் அறங்காவலர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களை பற்றிய தகவல்கள் அறிந்து பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அரசாங்கம் வசம் அறங்காவலர் பற்றிய அனைத்து தகவல்களும் இருக்காது.
எனவே மனுதாரர் கோரியவாறு அறங்காவலர் விண்ணப்பங்கள், அறங்காவலர் தேர்வுக்கான காரணங்கள் மற்றும் அறங்காவலர் தேர்வு செய்த அரசு உத்தரவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உரிய விதிகளை திருத்தம் செய்ய வேண்டும் அல்லது விதிகளை அறிவிக்க வேண்டும்" என தெரிவித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0