சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Oct 27, 2026 - 22:20
 1
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை:27

மதுரை: சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க உரிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சாலையில் திரியும் மாடுகளை பிடித்து கோசாலைகளுக்கு அனுப்பவும், கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி மதுரையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "மதுரையில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் சரியாக பராமரிப்பதில்லை. பகல் நேரங்களில் மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் சாலைகளிலேயே மாடுகள் படுத்துவிடுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரிக்கின்றன.
மேலும் மாடுகளுக்கு போதுமான உணவு, குடிநீர், தங்குமிடம் இல்லாததால் வெளியில் கிடக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட மற்ற பொருட்களை உண்கின்றன. இதனால் உடல்நலம் பாதிக்கப்படும் மாடுகள் சாலைகளிலேயே இறந்து விடுகின்றன.
எனவே சாலை, பொது இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து கோசாலைகளுக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும். மாடுகளை சாலைகளில் விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன்.
ஆனால், எனது மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலையில் திரியும் மாடுகளை கோசாலைகளுக்கு அனுப்பவும், கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவானது, நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சாலையில் மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களிடம் இருந்து இதுவரை 12 லட்சத்து 14,500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்கவும், முறைப்படுத்தவும் உரிய திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0