தமிழ்நாட்டில் விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் – கே.என்.நேரு இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் இல்லத் திருமண விழா, சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "நேரு அண்ணா என்றாலே திமுக மாநாடுதான் நினைவுக்கு வரும். அனைவருக்கும் உதாரணமாக இருப்பவர் கே.என்.நேரு" என்று கூறினார்.அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில், "முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியை பின்பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சுயமரியாதை திருமணங்களை நடத்தி வருகிறார்.தமிழ்நாட்டில் திமுக அல்லாத கட்சி ஆட்சிக்கு வந்தால் கே.என்.நேரு மீது ஒரு தாக்குதல் இருக்கும். அதிமுகவாக இருந்தாலும், தற்போது ஆட்சிக்கு வந்த தவெக இருந்தாலும், ஒரு தாக்குதல் இருக்கும். அதனை எதிர்க்கும் வல்லமை பெற்றவர் கே.என்.நேரு. தாக்குதலை எதிர்க்கும் வல்லமை கொண்ட இயக்கம் திமுக" என்றார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "திருச்சியை திமுகவின் கோட்டையாக உருவாக்கி, தொடர்ந்து பாடுபட்டு வரும் அன்பு சகோதரர் நேருவின் இல்லத் திருமணத்தில், எங்கள் வீட்டு திருமணம் போல கலந்து கொண்டுள்ளேன். திமுக இன்று வீரநடை போடுவதற்கு நான் மட்டும் காரணம் அல்ல; கே.என்.நேருவும் காரணம்.
ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள்தான் எங்களுக்கு முதலமைச்சர் என்று குறிப்பிட்டு என்னிடம் சொன்னார்கள். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், அதை சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. இனி, அவ்வாறு சொல்லாதீர்கள். ஏனென்றால் ஒரு கடுமையான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் திமுக ஆட்சி உதயமாகத்தான் போகிறது.
திமுக மாநாடுகளை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய அளவுக்கு நடத்திக் காட்டியவர் நேரு. மாநாடு என்றால் நேரு என்று கூறினார்கள். நேரு என்றாலே மாநாடுதான். ஒரு மாநாட்டை நடத்துவதற்கும், அதை வரலாறாக மாற்றுவதற்கும் நேருவுக்கு மட்டும்தான் அருகதை இருக்கிறது.
வருகின்ற சோதனைகள், வேதனைகள் உங்களுக்கு தெரியும். அவற்றைப் பற்றி கவலைப்படாமல் நீதிமன்றத்திற்கு சென்று வென்று காட்டுவேன் என்ற பிடிவாதத்தோடு பணியாற்றிக் கொண்டிருப்பவர்தான் கே.என்.நேரு.
திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் வரப்போகிறது. கடந்த ஆறு மாதங்களாக நடப்பது ஆட்சி அல்ல; வெறும் காட்சி மட்டும்தான். மாற்றம், மாற்றம் என்று என்று கூறினார்கள். மக்களுக்கு ஏமாற்றம் மட்டும் தான் நிலைத்திருக்கிறது.
திரையில் கதாநாயகனாக இருந்தவர், நிஜத்தில் வில்லனாக இருக்கிறார். தமிழ்நாட்டில் பல்வேறு குற்ற சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை ஆட்சியைச் சார்ந்தவர்கள், அவர்களின் கட்சியை சார்ந்தவர்கள்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். தூய சக்தி என்று சொல்லி கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.மனு கொடுக்க வந்த நபரை துணை சபாநாயகர் தாக்கினார் என்ற வீடியோவை பார்த்தீர்கள். ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கு என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். இந்த சம்பவங்களைப் பற்றி முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார். முறையாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். இதற்கெல்லாம் முடிவு கட்ட விரைவில் ஒரு நல்ல சூழல் அமையும்.
பாவேந்தர் பாரதிதாசன் சொன்னது போல மணமக்கள் 'வீட்டிற்கு விளக்காய் நாட்டிற்கு தொண்டர்களாக இருந்து பாடுபடுங்கள்' பணியாற்றுங்கள்" என்று வாழ்த்தினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0