கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை - திருமாவளவன்

Nov 13, 2026 - 22:40
 0
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை - திருமாவளவன்

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உட்கட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் பணி குழு நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "​வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உட்கட்சித் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் ஏற்கனவே நியமிக்கப்பட்டு மூன்றாண்டு காலத்தை நிறைவு செய்த 93 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்துவது தொடர்பாக மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

​சமூக நீதித்துறை சார்பில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 2026-27 கல்வி ஆண்டுக்கு 366 மாணவர்களுக்கு உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 165 மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர்.​ அனுமதிக்கப்பட்ட 366 மாணவர்களில், 140 பேர் சேர்க்கை விவரங்கள் மற்றும் நிதி கேட்புகளுடன் இணையத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

​இவர்களில் 84 மாணவர்களுக்குக் கல்வி மற்றும் இதர கட்டணச் செலவுகளுக்கான உதவித்தொகை தொகையாக ரூ.30 கோடியே 24 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. ​மீதமுள்ள மாணவர்களுக்கான வங்கிக் கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், விடுபட்டவர்கள் விவரங்களைத் தெரிவித்தவுடன் உடனடியாகத் தொகை விடுவிக்கப்படும் எனவும் சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது.

​தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட 245 டாஸ்மார்க் தொழிலாளர்கள், அந்தச் சூழலிலும் கூட தொடர்ந்து பணிக்குத் திரும்பிப் பணியாற்றி வருகின்றனர். எனவே, அவர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை அரசு முற்றிலுமாக ரத்து செய்து, வழக்கம் போலப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுவப்படும் மைல்கற்களில் இந்தி கட்டாயமாக எழுதப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தமிழ்நாடு இருமொழிக் கொள்கையைக் கொண்ட ஒரு மாநிலமாகும். அதற்கான சட்டமும் நடைமுறையில் உள்ளது. ஆகவே, அதிகாரிகள் மாநில அரசின் சட்டம் மற்றும் கொள்கையைப் பின்பற்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே மைல்கற்களில் எழுத வேண்டும். ஆங்காங்கே பொறிக்கப்பட்டுள்ள இந்தி எழுத்துகளை உடனடியாக அழிக்கத் தமிழக அரசு அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நியமனங்களில் சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீட்டு முறை முறையாக நடைமுறை படுத்தப்பட்டதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அரசு இதில் கவனம் செலுத்தி அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படுவதை வழிவகை செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் வரலாற்றுப் பிழைகள் மலிந்த நூல்கள் கொள்முதல் செய்யப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் நூலகம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது நூலகங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நூல்களை ஆய்வு செய்ய வேண்டும். வரலாற்றுப் பிழைகள் உள்ள நூல்களை உடனடியாக அப்புறப்படுத்துவதோடு, அத்தகைய நூல்களைக் கொள்முதல் செய்த அதிகாரிகள் மற்றும் பதிப்பகத்தார் மீதும் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.கர்நாடக அரசியல் தலைவர்கள் மேகதாது அணை குறித்து பேசிவருவது முழுக்க முழுக்க அரசியல் நோக்கிலானது என்றாலும், தமிழக அரசு இதுகுறித்து மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அங்கு அணை கட்ட இயலாது என்றாலும், உரிய நேரத்தில் ஒன்றிய அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று அத்தகைய முயற்சிகளை முறியடிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அமைச்சர், பொதுச் செயலாளர் ஏற்கனவே பேசியுள்ளனர். பெண் அரசு ஊழியருக்கு எதிராக நடந்ததை சரி எனக் கூறவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளோம். தவறு நடந்திருந்தால் சட்டமன்ற உறுப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தவெக எம்எல்ஏ மறுப்பு

முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், யாருக்கும் தவறான குறுஞ்செய்தி அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தவெக சார்பில் வெற்றி பெற்ற ஒரே சட்டமன்ற உறுப்பினர் தான்தான் என்பதால், தன்னைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்பி அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தான் தவறான குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என நிரூபிக்கப்பட்டால், தன் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0