மதுரை நகைக்கடை கொள்ளை சம்பவம்: தலைமறைவாக இருந்த யூடியூபர் நிஷாந்த் கைது; தருமபுரியில் தட்டித்தூக்கிய போலீஸ்

Nov 16, 2026 - 22:34
 0
மதுரை நகைக்கடை கொள்ளை சம்பவம்: தலைமறைவாக இருந்த யூடியூபர் நிஷாந்த் கைது; தருமபுரியில் தட்டித்தூக்கிய போலீஸ்

மதுரை/ தருமபுரி: மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் யூடியூபர் நிஷாந்தை 5 நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, தருமபுரியில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் தனிஷ்க் நகைக்கடை அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
புதிய கடை என்பதால் தரைத்தளத்தில் மட்டும் தற்காலிகமாக விற்பனை நடைபெற்று வந்தது. இரண்டாவது தளம் காலியாக இருந்த நிலையில், மூன்றாவது தளத்தில் நகைகளை வைப்பதற்காக லாக்கர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி முகமூடி அணிந்து வந்த மர்ம நபர், கடைக்குள் புகுந்து காட்சிப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை மூட்டை மூட்டையாக கொள்ளையடித்துச் சென்றார்.
முதலில் சுமார் 15 கிலோ நகைகள் கொள்ளை போனதாகக் கூறப்பட்ட நிலையில், பின்னர் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், அவற்றின் மதிப்பு சுமார் ரூ.21 கோடி என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
சிசிடிவி காட்டிய முக்கிய தடயம்
கொள்ளை நடந்த கடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொள்ளைக்கு முன்பாக மர்ம நபர் வாடிக்கையாளரை போல பலமுறை கடைக்கு வந்து சென்றதைக் கண்டறிந்தனர்.குறிப்பாக, கடந்த நவம்பர் 5-ம் தேதி அதிகாலை கடைக்குள் நுழைய முயன்றதும், பின்னர் திட்டமிட்டு நவம்பர் 12-ம் தேதி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெவ்வேறு நாட்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில், கொள்ளையில் ஈடுபட்ட நபர் மதுரையைச் சேர்ந்த யூடியூபர் நிஷாந்த் என்பது கண்டறியப்பட்டது.

தந்தை, தோழி கைது; 5 முதல் 6 கிலோ நகைகள் மீட்பு

இதையடுத்து, நிஷாந்தின் தந்தை சுரேஷ், நிஷாந்தின் நெருங்கிய தோழியும், இன்ஸ்டா பிரபலமுமான மீனாட்சி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை மதுரை மாடக்குளம் கண்மாய் அருகே புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 5 முதல் 6 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் மீட்கப்பட்டது.

9 தனிப்படைகள் - தருமபுரியில் சிக்கிய நிஷாந்த்

கொள்ளைச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படும் நிஷாந்த் தலைமறைவானதை தொடர்ந்து, அவரைப் பிடிக்க மதுரை மாநகர போலீசார் 9 தனிப்படைகளை அமைத்து தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அடிக்கடி செல்போன் எண்களை மாற்றியும், இருப்பிடத்தை மாற்றியும் வந்ததால் அவரை பிடிப்பது போலீசாருக்கு கடும் சவாலாக இருந்தது.

இதையடுத்து, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், கடந்த 5 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த நிஷாந்த், தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் பேருந்தில் தப்பிச் செல்ல முயன்றபோது தனிப்படை போலீசாரிடம் இன்று சிக்கினார்.

மதுரைக்கு அழைத்து வரப்படும் நிஷாந்த்

கைது செய்யப்பட்ட நிஷாந்தை மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட எஞ்சிய நகைகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன? இந்த கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? கொள்ளைக்கான திட்டம் எப்போது தீட்டப்பட்டது? கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்பனை செய்ய முயற்சி நடைபெற்றதா? என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற உள்ளது.

நிஷாந்த் சிக்கியது எப்படி? சுவாரஸ்ய தகவல்

போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்த நிலையில், நிஷாந்த் தருமபுரி வழியாகச் சேலம் நோக்கிச் செல்லும் ஆம்னி பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது தலையில் தொப்பி அணிந்து, முகத்தை மறைத்தபடி அமர்ந்திருந்த நிஷாந்தின் நடவடிக்கைகள் பேருந்து நடத்துநருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் உடனடியாக தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்தை அடையாளம் கண்டு பின்தொடர்ந்தனர்.சேஷம்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, போலீசார் அந்த ஆம்னி பேருந்தை மடக்கினர். பேருந்து நிறுத்தப்பட்டதும் அங்கு போலீசார் குவிந்திருப்பதைக் கண்ட நிஷாந்த் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாகப் பேருந்திலிருந்து கீழே குதித்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

மதுரை காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

ஆனால், பேருந்தின் இருபுறங்களிலும் தயாராக இருந்த போலீசார் அவரை தப்பவிடாமல் லாவகமாக மடக்கிப் பிடித்தனர். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து அருண் கபிலன் மதுரை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரனுக்கு தொடர்பு கொண்டு நிஷாந்தை கைது செய்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மதுரையிலிருந்து வந்த தனிப்படை காவல் துறையினரிடம் தருமபுரி அதியமான் கோட்டை காவல் துறையினர் நிஷாந்தை ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து, குற்றவாளி நிஷாந்தை காவல் துறையினர் மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0