ஆதாரம் இருக்கு... அதனால் தான் கைது... அன்பில் மகேஸ் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
மதுரை: அன்பில் மகேஸ் வீட்டில் வைத்து பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதால் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தைத் திறந்து வைப்பதற்காக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வருகை தந்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக முதலமைச்சரின் உத்தரவின்படி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் முடிவுகள் எட்டப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும்" என்றார்.தொடர்ந்து, அன்பில் மகேஸ் மீதான நடவடிக்கை தொடர்பாக பேசிய அவர், "அன்பில் மகேஸ் விவகாரத்தில் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. கல்வி நிறுவனங்களிடமிருந்து ஆதாரப்பூர்வமாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வசூல் நடைபெற்று வந்துள்ளது.
எந்தெந்த கல்வி நிறுவனங்களிடம் யார்? எவ்வளவு பணம் வசூலித்தார்கள்? கட்சி ஃபண்ட் என்ற பெயரில் பள்ளிகளிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டது? என்பதற்கான விவரங்கள் உள்ளன. யாரிடம் பணம் கொடுக்கப்பட்டது? என்பதற்கான பணப் பரிவர்த்தனை ஆதாரங்களும் உள்ளன.
குறிப்பாக, அன்பில் மகேஸின் வீட்டிற்குச் சென்று பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இருப்பதால் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதிய ஆதாரங்கள் இல்லை என்றால் காவல் துறை அவரை கைது செய்திருக்காது" என தெரிவித்தார்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
மேலும் பேசிய அவர், "மழையால் வேளாண் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதுதிமுக-வால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் கூட மீண்டும் வெற்றி பெற முடியாத நிலைதான் திமுகவுக்கு உள்ளது. அதிகபட்சமாக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது. மீண்டும் எப்போது தேர்தல் வந்தாலும் தவெக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
முதலமைச்சர் தினமும் மக்களை சந்திக்கிறார்
முதலமைச்சர் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருந்து அனைவரையும் சந்தித்து வருகிறார். அரசியலில் அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது கூடத் தெரியாமல் எதிர்க்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். தற்போது லஞ்சம் குறைந்துவிட்டது.
தீபாவளிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் கடந்த ஒரு மாதமாகத் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
செயலி மூலமாக பேருந்துகளின் இயக்கத்தை தெரிந்து கொள்ளவும், பேருந்து சேவைகளை ஒருங்கிணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டண கொள்ளை நடைபெறாமல் கண்காணிக்கப்படும். இந்த தீபாவளியின் போது பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். புதிய பேருந்துகளும் வாங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டில் கூடுதலாக பேருந்துகள் வாங்கப்படும்.
தீபாவளியன்று மின்வெட்டு இருக்காது
தீபாவளி பண்டிகையின் போது மின்வெட்டு ஏற்படாமல் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவையில்லாமல் மின்தடை செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்" என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0