மதுரை சிறையில் தலைமை காவலரை தாக்கிய கைதி - பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை
மதுரை: மதுரை மத்திய சிறையில் தலைமை காவலரை கைதி ஒருவர் முகத்தில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய சிறையில் தற்போது 9,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை சிறையின் சி-பிளாக் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான கைதிகள் குளிப்பதற்காக வெளியே வந்துள்ளனர். அப்போது பாதுகாப்புப் பணியில் நான்கு காவலர்கள் மட்டுமே ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பகுதியில் கைதி மூர்த்தி (44) என்பவர் குளியலறையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பணியை மேற்பார்வையிட்டு கொண்டிருந்த தலைமை காவலர் தெய்வநாயகம், கைதி மூர்த்தியை கண்டித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கைதி மூர்த்தி, தலைமை காவலர் தெய்வநாயகத்தின் முகத்தில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் அவரது முகம் மற்றும் கண் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த சக காவலர்கள், காயமடைந்த தெய்வநாயகத்தை மீட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கைதி மூர்த்தியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை
இந்த சம்பவம் குறித்து சிறைக் காவலர்கள் தரப்பில் கூறுகையில், “தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்துக்குப் பிறகு மதுரை மத்திய சிறையில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே அதிகப்படியான பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்துடன் பணியாற்றி வரும் சிறைக் காவலர்களுக்கு, கைதிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.
சிறைகளின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. திரிபாதி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சிறைக் காவலர்கள் தரப்பிலிருந்தும் ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும்.
அப்போது தான் சிறைகளில் பணியாற்றும் காவலர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள், பணிச்சுமை, போதிய ஆள்பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து குழுவிடம் நேரடியாக எடுத்துரைக்க முடியும்.
கடந்த காலங்களில் சிறைக்குள் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதைப் போன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும். சிறைக் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், போதிய எண்ணிக்கையில் காவலர்களை நியமிக்கவும் அரசு மற்றும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0