குறுக்கு வழியில் ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை - செல்லூர் ராஜு
மதுரை: குறுக்கு வழியில் ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அதிமுக நிர்வாகி பி.எம். மன்னனை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அங்கு சென்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, "பி.எம். மன்னனை தனி அறையில் அடைத்து வைத்திருந்ததைப் பார்த்தபோது, என்னையும் உள்ளே வைத்துவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஒரு தீவிரவாதியை அடைத்து வைப்பதைப் போல அவரை வைத்துள்ளனர். நவம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கி விட்டு, அதற்கு முன்பாகவே அவரை அழைத்துச் சென்று விசாரிக்கும் அளவுக்கு அவர் என்ன தீவிரவாதியா? தவெகவினரை போல போதைப்பொருள் விற்பனை செய்பவரா?
முஸ்தபாவும், மன்னனும் நெருங்கிய நண்பர்கள். மாமன், மைத்துனர் உறவின் அடிப்படையில் தான் இருவரும் பேசியுள்ளனர். தவெக நிர்வாகிகள் பணம் வாங்குவதாக முஸ்தபாவிடம் மன்னன் பேசியதற்காகவே இத்தகைய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிமுகவுக்கு கடுகளவும் கிடையாது. மக்களைச் சந்தித்து, தேர்தல் மூலம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோமே தவிர, குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. உண்மையில் இந்த ஆட்சியே கவிழப்போகிறது.
முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரன் கிடையாது. 22 வார்டுகளில் நிர்வாகிகளுக்கு பதவி வழங்குவதற்காகப் பணம் கேட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. முஸ்தபாவை நான் நேரடியாகக் குற்றம்சாட்டவில்லை. அவரது பிரதிநிதி கனிராஜ்தான் பேசுவதாகக் கூறப்படுகிறது. கவுன்சிலர் பதவியையே முஸ்தபா ஏலம் விடுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
தவெக ஆட்சியின் அவப்பெயரையும், விலைவாசி உயர்வையும் மறைப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனை அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எனது வீட்டில் கூட முந்தைய இரவு மின்சாரம் இல்லாமல் கொசுக்கடியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. கடந்த ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.20 என்றால், தற்போது ரூ.36 எனக் கூறுகின்றனர். அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை.முதலமைச்சர் விஜய் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை. அரசு திட்டங்கள் தொடர்பாக உரிய அறிவிப்புகளும் வெளியாகவில்லை. அரசு ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் நிர்மல்குமார் தனது துறையைச் சரியாகக் கவனிக்க வேண்டும்.
தவெக ஆட்சியில் இருந்தாலும் காவல்துறையினர் தங்களது கண்ணியத்தைக் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன். மக்கள் இந்த ஆட்சியைத் தூக்கி எறிவார்கள். இந்த அரசு எவ்வளவு விரைவாக முடிவுக்கு வருகிறதோ, அந்த அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்" என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0