ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் முகிலனுக்கு பிடிவாரண்ட்; நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

Nov 3, 2026 - 22:41
 1
ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் முகிலனுக்கு பிடிவாரண்ட்; நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் முகிலன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட முகிலன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாததால் முகிலனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் இருந்த முகிலனை மதுரை மாவட்ட சிபிசிஐடி போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். பின்னர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது உடல்நலக்குறைவு காரணமாகவே விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என முகிலன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ ஆவணங்களைச் சமர்ப்பிக்க அறிவுறுத்திய நீதிமன்றம், நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

கைது நடவடிக்கை குறித்து முகிலன் பேட்டி

நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், "2017-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் நான் உள்ளிட்ட நான்கு பேர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை.

இதனால் எனக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்தபோது, மறுநாள் வழக்கு விசாரணை இருப்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பிடியாணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தேன். ஆனால், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த என்னை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தகவலை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக்கூட அனுமதிக்கவில்லை. நேற்று இரவு 9 மணிக்கு கைது செய்துவிட்டு, அதற்கான கைது குறிப்பாணையை இன்று காலைதான் வழங்கினர். வழக்கறிஞர்களிடம் பேசுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. போராட்டம் நடத்திய பிறகுதான் வழக்கறிஞர்களுக்குத் தகவல் தெரிவிக்க அனுமதித்தனர்.

விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்திருந்தார். ஆனால், அதன் பின்னரும் காவல்துறையினர் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் மூலம் அழைப்பாணை அனுப்பி வருகின்றனர். முதலமைச்சர் வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டு, காவல்துறையினர் தொடர்ந்து சம்மன் அனுப்புவது சட்டவிரோதமானது.

"கனிமவளக் கொள்ளையை தடுக்கக் கோரி போராட்டம்"

ஈரோடு மாவட்டத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி, சுமார் 500 பேர் நீதிமன்றத்தில் சரணடைய தயாராக இருப்பதாக அறிவித்திருந்தோம். குடிமக்களாகிய எங்களது கடமையைச் செய்யத் தவறியதாகக் கூறி எங்களை சமூகக் குற்றவாளிகளாகக் கருதி கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தோம். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டோம்.

ஈரோடு மாவட்டத்தில் கனிம வள கொள்ளைக்காக சட்டவிரோதமாக சுமார் 3,000 டன் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. பெருந்துறைக்கு முதலமைச்சர் வருகையின்போது காவல்துறையின் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தன்னைக் கைது செய்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0