சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்

Nov 15, 2026 - 22:23
 0
சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகியுமான சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் சி. விஜயபாஸ்கர்.

அந்தக் காலக்கட்டத்தில், தனது வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.34 கோடி அளவுக்கு சொத்துகளை சேர்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கின் அடிப்படையில் சொத்துகள் சேர்க்கப்பட்டதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியது.

குறிப்பாக, வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் சொத்துகளின் பின்னணி மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி, கடந்த நவம்பர் 6-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், அன்றைய தினம் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, தற்போது அவருக்கு அமலாக்கத்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.

அதில், வரும் 18-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2023-ஆம் ஆண்டிலேயே குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், அதே வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் இரண்டாவது சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராவாரா?

விசாரணையின்போது சொத்துகள் மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பாக அவரிடம் என்னென்ன கேள்விகள் எழுப்பப்படவுள்ளன என்பது குறித்து அன்றைய தினம் தெரியவரும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0