மேகதாது அணை கட்டுவீங்களா? கர்நாடக முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
சென்னை: மேகதாது அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதாக கூறிய கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழங்கு தொடர வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "மேகதாது அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதாக கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் அவதூறாக பேசியிருக்கிறார். அதுவும், பிரதமர் பங்கேற்ற மேடையில் இவ்வாறு அவர் பேசியிருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது.
மேலும், உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் அவரது பேச்சு அமைந்துள்ளது. வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், அதனை அணை கட்டுவதற்கான அனுமதி என திரித்துக் கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மேகதாது அணை கட்டப்பட்டால், சென்னை உட்பட 11 மாநகராட்சிகள் மற்றும் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் அடியோடு பாதிக்கப்படும்.
மேலும், சுமார் 22 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாக மாறி, ஒட்டுமொத்த தமிழகத்தின் உணவு உற்பத்தியும் கேள்விக்குறியாகும் அபாயம் உண்டாகும்.
காவிரி மேலாண்மை ஆணையம் என்பது உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதிகள் இன்றி மேகதாது திட்டத்தை செயல்படுத்தவே முடியாது.
எனவே, அண்டை மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையிலும், சட்டவிரோதமாகவும் பேசி வரும் கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமாரிடம் பிரதமர் அலுவலகம் உரிய விளக்கம் கேட்க வேண்டும்.
அத்துடன், தமிழக அரசும் அவர் மீது உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து, மேகதாது திட்டத்தைதடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மேகதாது அணைக்கு பதிலாக தமிழக எல்லையில் உள்ள ராசிமணல் பகுதியில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை எப்போதும் விட்டு தர மாட்டோம்" என பி.ஆர்.பாண்டியன் பேசினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0