விஜய் வழங்கிய ‘ஆல் இஸ் வெல்’ கேக் - மழலைகளுடன் கொஞ்சி மகிழ்ந்து குழந்தைகள் தினம் கொண்டாடிய முதல்வர்
சென்னை:
சென்னை கொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வாழ்த்து அட்டையுடன் கேக் வழங்கி, குழந்தைகள் தின விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொண்டாடினார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் என மொத்தம் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 பயனாளிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. மேலும், கேக் வழங்குவதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து, நவம்பர் 14ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குழந்தைகள் தின விழாவைக் கொண்டாட முதலமைச்சர் திட்டமிட்டிருந்தாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை கொளத்தூரிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு கேக் மற்றும் தனது புகைப்படத்துடன் ‘ஆல் இஸ் வெல்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளை வழங்கி மகிழ்வித்தார்.
அவருடன் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஸ்ரீநாத், ஜெகதீஸ்வரி மற்றும் தலைமை செயலாளார் சாய்குமார் ஆகியோரும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கேக் வழங்கினர். இதேபோல், கோடம்பாக்கம் அரசு பள்ளியில் அமைச்சர் என். ஆனந்த் மாணவர்களுக்கு கேக் வழங்கினார்.
(நவம்பர் 14) சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் முன்கூட்டியே இன்று அரசு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.மழலைகளை வாழ்த்திய விஜய்
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியர்கள் வீரமங்கை வேலுநாச்சியார், நேரு, பாரதியார் போன்றோர்களின் வேடங்களிட்டு, அவர்கள் கூறிய கருத்துகளை சுட்டிக்காட்டி பேசினர். அவற்றை கேட்டு ரசித்த முதலமைச்சர் விஜய், குழந்தைகளின் கன்னங்களை கிள்ளி அவர்களை வெகுவாக பாராட்டினார்.
அதேபோல, கேக் வழங்கும்போது மழலையர் வகுப்பில் இருந்த ஒரு மாணவனை தூக்கி, கேக் ஊட்டி விட்டபடியே, “பிடிச்சிருக்கா?, நல்லா இருக்கா?” என்று சிரித்தபடியே கேட்க, உடனிருந்த அமைச்சர்களும் சிரித்து மகிழ்ந்தனர். அதன்பிறகு மாணவர்களை பார்த்து கையசைத்தபடி அந்த வகுப்பறையிலிருந்து சென்றார்.
தொடர்ந்து, அங்குள்ள அங்கன்வாடிக்குச் சென்ற முதலமைச்சர், வரிசையாக அமர வைத்திருந்த மாணவர்களுக்கு தனது கையால் இனிப்பு பரிமாறினார். மேலும், சத்துணவு கூடத்திற்குச் சென்று அங்குள்ள பொருட்களின் தரம் மற்றும் உணவு குறித்து சமையலர்களிடம் கேட்டறிந்த பிறகு பள்ளியிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கேக் வழங்குவதற்கான நிபந்தனைகள்
குழந்தைகள் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்குவதற்காக மாநில அரசு சார்பில் 9.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மொத்தம் 61,84,566 ஸ்பாஞ்ச் கேக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேக்கும் 45 கிராம் எடை கொண்டதாக இருக்க வேண்டும். மிக்ஸ்டு ஃப்ரூட், கிளாசிக் வெனிலா, ரிச் சாக்லேட் மற்றும் பட்டர் அல்லது மில்க் ஆகிய நான்கு சுவைகளில் கேக்குகள் வழங்கப்படுகின்றன.மாணவர்களுக்கு வழங்கப்படும் கேக்குகள் தரமானதாகவும், மென்மையாகவும், பூஞ்சை மற்றும் கெட்டுப்போன மணம் இல்லாததாகவும் இருக்க வேண்டும். மேலும், தடை செய்யப்பட்ட நிறமூட்டிகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இல்லாத கேக்குகளாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேக்குகள் தனித்தனியாக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் பேக்கிங் செய்யப்பட்டு, குழந்தைகள் தினத்தன்று விநியோகிக்கப்படும்போது குறைந்தபட்சம் 30 நாட்கள் காலாவதி காலம் எஞ்சியிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களே கேக்குகளை வாணிபக் கழகத்தின் கிடங்குகளுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0