குழந்தைகளுக்கு கேக் ஊட்டிய முதல்வர் விஜய், செஞ்சி சிறுமியின் பெற்றோரை சந்திக்காதது ஏன்? கனிமொழி கேள்வி

Nov 14, 2026 - 22:51
 0
குழந்தைகளுக்கு கேக் ஊட்டிய முதல்வர் விஜய், செஞ்சி சிறுமியின் பெற்றோரை சந்திக்காதது ஏன்? கனிமொழி கேள்வி

விழுப்புரம்: குழந்தைகளுக்கு கேக் ஊட்டிய முதலமைச்சர் விஜய், செஞ்சி சிறுமி வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறி இருக்கலாம் என கனிமொழி கூறினார்.

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி, நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வடிவேல், பவானி தம்பதியினரின் இரண்டாவது மகள் 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமி மாயமாகி இன்றுடன் 35 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் பெற்றோர்கள் மிகுந்த வேதனையில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. மாயமான சிறுமியின் பெற்றோர்களை நடுப்பட்டு கிராமத்தில் இன்று நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ”2 வது வகுப்பில் படிக்கக்கூடிய 7 வயது சிறுமி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாள் காலையில் இருந்து காணவில்லை.

அந்த குழந்தை காணாமல் போய் இன்று வரை கிட்டத்தட்ட 35 நாட்கள் ஆகிறது. ஆனால் அந்த குழந்தையை கண்டுபிடிப்பதற்கு இந்த அரசாங்கம் உண்மையாகவே எதையும் செய்ததாக தெரியவில்லை.

குழந்தையை காணவில்லை என்று தெரிந்தவுடன் புகார் அளித்துள்ளனர். அப்போது காவல்துறை அதிகாரிகளும் அதை விசாரிக்க தொடங்கியுள்ளனர். சட்டப்படி ஒரு குழந்தையை காணவில்லை என்றால், அந்த குழந்தையை மிஸ்ஸிங் என எப் ஐ ஆர் (FIR) பதிவு செய்யக் கூடாது.

24 மணி நேரத்திற்குள் அந்த குழந்தை கிடைக்காவிட்டால் கடத்தல் அல்லது டிராஃபிக்கிங் என்றுதான் பதிவு செய்ய வேண்டும். ஏன் மிஸ்ஸிங் என பதிவு செய்துள்ளனர் என தெரியவில்லை. இதைப் பற்றி கவலையும் இல்லாமல் குழந்தைகள் நலத்துறை, காவல்துறை என இரண்டையும் எதற்காக முதலமைச்சர் விஜய் கையில் வைத்துக் கொண்டு இருக்கிறார்?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “இவரே குழந்தைகளை பார்த்து தான் நண்பா, நண்பி என்று சொல்லி, அந்த குழந்தைகளை வீட்டில் சென்று அடம்பிடியுங்கள் என்றும் கூறித்தான் ஓட்டு வாங்கி, இந்த பதவியில் உட்கார்ந்து இருக்கிறார். நேற்று முதலமைச்சர் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி கொண்டிருக்கிறார். குழந்தைகளுக்கு கேக் ஊட்டிய முதலமைச்சர் விஜய், இந்த வீட்டுக்கு வந்து அந்த பெற்றோருக்கு ஒரு வார்த்தை ஆறுதல் சொல்லி இருக்கலாம்.

அவர் வரவில்லை என்றாலும், இங்கு இருக்கக்கூடிய பொறுப்பு அமைச்சராவது வந்து நாங்கள் நிச்சயமாக கண்டுபிடித்து விடுவோம் என்று ஆறுதலாக இரண்டு வார்த்தை சொல்லியிருக்கலாம். 35 நாட்கள் ஆகிவிட்டது எந்தவித சரியான நடவடிக்கையும் இதுவரை இல்லை. பெற்றோருக்கு எந்த விதமாகவும் ஆறுதலாக, நம்பிக்கை தரக்கூடிய எந்த தகவலும் இல்லை. இங்கே மட்டுமல்ல இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எத்தனையோ குழந்தைகள் காணாமல் போய் இருக்கிறார்கள்.குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன, கடலூரில் சில குழந்தைகள் ஒரே நேரத்தில் காணாமல் போன அவலம் நடந்தேறி இருக்கிறது. கல்லூரியில் படிக்கக் கூடிய மாணவர்கள், வேலைக்கு போகக்கூடிய பெண்கள், ஒரு குழந்தையும் ஒரு அம்மாவையும் காணவில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்த ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள், யார் வீட்டுக்கும் போய் ஒரு ஆறுதல் வார்த்தை சொல்ல கூட தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள்" என விமர்சித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0