ஜெம் வீரமணி வீட்டில் சிறுமியின் உடல் புதைப்பா? ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி தேடும் போலீஸ்
சென்னை: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணியின் வீட்டில் குழந்தையின் உடல் புதைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது வீட்டு பணியாளர் ஜெம் வீரமணி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, அவர்கள் மூவரும் நீதிமன்றக் காவலின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, ஜெம் வீரமணி மீது முன்பே இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்ட போது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த பின்னணியில் தான், ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள வீட்டிற்கு இன்று சென்ற 20-க்கும் மேற்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சென்று, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவரது வீட்டின் பின்புறம் சிறுமி ஒருவரின் உடல் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, இந்த தேடுதல் வேட்டை நடைபெறுவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுமிகள், கார்களில் ஜெம் வீரமணி வீட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இப்படியொரு சோதனை நடைபெறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழுமையாக தோண்டி ஆய்வு செய்த பின்னரே இதுகுறித்த உண்மை தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணியின் கார் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரிலேயே, இந்த தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. காவலில் இருந்த அந்த ஓட்டுநரையும் சம்பவ இடத்துக்கு நேரில் அழைத்து வந்த போலீஸார், அவர் அடையாளம் காட்டிய இடத்தில் பள்ளம் தோண்டி சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு துணைக் காவல் ஆணையர், மூன்று உதவிக் காவல் ஆணையர்கள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசாரும், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், மருத்துவமனை ஊழியர்களும், தடயவியல் நிபுணர்களும் உடனிருக்கின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0