ஜெம் வீரமணி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்பா? அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி
சென்னை: ஜெம் வீரமணி விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்பு உள்ளதா? என அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக காவல்துறை டிஜிபி தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த ஆறு மாதங்களில் 19,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 8,600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 ஆயிரம் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது வழக்குகளின் எண்ணிக்கை சுமார் 70 முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கஞ்சா தொடர்பான குற்றங்களில் மட்டும் சுமார் 14 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைக் கண்காணிப்பதற்கும், ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை டிவியில் பார்த்து தெரிந்துகொண்டவர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், “அதிமுக ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை டி.வி-யில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னார். அதுபோல் நாங்கள் தொலைக்காட்சி பார்த்து தெரிந்து கொள்வதில்லை.
மக்களுக்கு தேவையான பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு நாளும் முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். குற்றச் சம்பவங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் காவல் துறையினர் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்” எனக் கூறினார்.தொடர்ந்து, திமுக முன்வைத்த விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், “ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரம் குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பேசி வருகின்றனர். திமுக ஆட்சியில் யாரோ பணம் வாங்கிக்கொண்டு ஜெம் வீரமணியை தப்பவிட்டதை பற்றி வெளியில் தெரியாமல் திசைதிருப்புவதற்காகவே அவர்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
முன்னாள் முதல்வருக்கு தொடர்பு உள்ளதா?
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் பணம் பெற்றுக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து அவரை விடுவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வருக்கு தொடர்பு உள்ளதா அல்லது அவர் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாரா? என்று அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்தக் கேள்வியை திமுக எம்.பி கனிமொழி கேட்டாக வேண்டும்.
கலைஞர் பெயரில் நூலகம் கட்டினார்கள், கலைஞர் என்றாலே திருட்டுதான். அதன் பின்னர், பெரியார் பெயரில் நூலகங்கள் கட்டி தமிழ்நாடு முழுவதும் சுமார் 70 ஆயிரம் புத்தகங்கள் போலியான பதிப்பகத்தில் இருந்து கொள்முதல் செய்துள்ளனர். இதையெல்லாம் திசை திருப்பவே தொடர்ந்து எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
ஆறு மாத ஆட்சியில் மகளிருக்கு பேருந்து பயணம் விரிவாக்கம், தாலிக்குத் தங்கம், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக எழும் புகார்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் ஏதாவது ஒரு கதையை கொண்டு வந்து மக்களை திசை திருப்ப பார்க்கின்றனர்” என்றார்.
செஞ்சி சிறுமி குறித்து பேசிய அவர், “அனைத்து கோணங்களிலும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. காப்புக்காடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிறுமி விரைவில் மீட்கப்படுவார்” எனத் தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0