காணாமல் போனவர்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்? என்பன உள்ளிட்ட விவரங்களை மூன்று வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்யும்படி டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த சங்கர்ராஜ் என்பவரை சொத்து பிரச்னைக்காக, அவரது தந்தையும், சகோதரரும் சட்டவிரோதமாக சிறைபிடித்து வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என அவரது மனைவி புவனேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் பி.கார்த்திகேயன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "சங்கர்ராஜை கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும்" என புவனேஸ்வரி தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சங்கர்ராஜை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், சங்கர்ராஜ் காணாமல் போனது தொடர்பாக அவரது தந்தை பொன்னன் ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
2021-ஆம் ஆண்டு சங்கர்ராஜ் மாயமானது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை கண்காணிக்க வேண்டும் என திருக்கோவிலூர் டிஎஸ்பி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என தெரிவித்தார்.இதனை கேட்ட நீதிபதிகள், "பல்வேறு மாநிலங்களில் காணாமல் போனவர்களை கண்டறிய ஏஐ தொழில்நுட்பத்தை, அந்த மாநில காவல் துறையினர் பயன்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் அது போன்ற செயலிகள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது தெரியவில்லை" என குறிப்பிட்டனர்.
மேலும், ஆள்கொணர்வு வழக்குகளில் நீதிமன்றங்கள் அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பித்தாலும், தீவிரமாக விசாரணை நடத்தப்படுவதில்லை, என்பது தெரிய வந்துள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
பின்னர், சங்கர்ராஜை கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி திருக்கோவிலூர் டிஎஸ்பி-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், "தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்? எத்தனை வழக்குகளின் புலன் விசாரணை நிலுவையில் உள்ளன?
எத்தனை பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை? நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த போலீஸார் எடுத்த முயற்சிகள் என்ன? என்பது குறித்து 3 வாரங்களில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.
அதே போல, மாநிலம் முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளின் புலன்விசாரணையை விரைவுபடுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் டிஜிபி தனது அறிக்கையில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0