சண்டியர் தலைப்பு விவகாரம்; கமல் ஹாசன் அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவானவர் - டிடிவி தினகரன்

Nov 13, 2026 - 22:41
 0
சண்டியர் தலைப்பு விவகாரம்; கமல் ஹாசன் அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவானவர் - டிடிவி தினகரன்


கோவை: கமல் ஹாசன் அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவானவர் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய் அவர், "60 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருந்தத்தால், எவ்வளவோ வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டன. இந்தியாவில் தமிழகம் ஒரு சிறந்த மாநிலமாக இருந்தாலும் மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் மாபாதகத்தை தமிழகத்தில் இன்று ஆட்சி பொறுப்பில் அமர்த்தி இருக்கிறார்கள்.

தமிழ்நாடு இன்று எல்லாத் துறையிலும் பின்னோக்கி செல்கிறது, தமிழகம் சிறந்த மாநிலமாக இருந்த நிலை மாறி, இன்று பின்னோக்கி சென்று வருகிறது. விஜய் பற்றியோ தமிழக வெற்றி கழகம் பற்றியோ எதாவது சொன்னால் அவர்களை கைது செய்கின்ற காவல் துறை, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாடுகள் குறித்து தெரிந்ததும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அந்த சம்பவத்தில் உண்மை இருக்கிறது.விஜய்யை புரட்சித் தலைவருடன் ஒப்பிடுவது தவறு. சினிமாவில் வாத்தியார் என அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர். மதுவோ, சிகரெட்டோ போதைப் பழக்கங்கள் மற்றும் ஒழுக்கமற்ற செயல்களுக்கு எதிராக இருந்தவர் எம்.ஜி.ஆர். சினிமா மூலம் வருங்கால சந்ததிக்கு பாடம் எடுத்தவர். ஆனால் விஜய் படங்கள் எப்படி இருந்தது என எல்லோருக்கும் தெரியும்.

தமிழ்நாட்டை வீழ்ச்சியை நோக்கி கொண்டு செல்லுகின்ற ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. சினிமாவில் இருந்து வந்த கமல், விஜயகாந்த் ஆகியோரால் முதல்வராக முடியவில்லை, விஜய் முதல்வராகிவிட்டதால் மற்ற நடிகர்களுக்கும் அரசியலுக்கு வரலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

தனிமனித ஒழுக்கம் என்பது அரசியலில் முக்கியம் என்பதை அண்ணா , காமராஜ் ஆகியோர் வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு தனிமனித ஒழுக்கமே இல்லை, பதவியில் இருப்பவர்கள் செயல்பாடுகளை வாக்களித்தவர்கள் பார்க்க வேண்டும்.சண்டியர் படத்திற்கும் எந்த சமுதாயத்திற்கும் தொடர்பு இல்லை. தேவர் சமுதாயமும் தேவேந்திர குல சமுதாயமும் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். கமல் ஹாசன் அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவானவர். சினிமாவில் பெயர் வைப்பதால் எதுவும் குறைந்து போக போவதில்லை, டாக்டர் கிருஷ்ணசாமி அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 'தேவர் மகன்' படம் வந்ததால் எந்த ஜாதி மோதல் வந்தது?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0