கோவை பெரியார் அறிவுலகத்தில் 257 போலி ஆங்கில புத்தகங்கள் அகற்றம்
கோவை: பெரியார் அறிவுலகத்தில் ஆங்கில பிரிவில் இருந்த 257 போலி ஆங்கில புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன.
கோவை காந்திபுரத்தில் 300 கோடி ருபாய் செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்திற்காக அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் சில புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான எழுத்தாளர்கள் பெயரில் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் அகற்றப்பட்டன. இந்த விவகாரத்தை எழுத்தாளர் பெருமாள் முருகன் உள்ளிட்டோர் பொதுவெளியில் எழுப்பியதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிக்கை விடுத்தனர்.இதற்கிடையே, புத்தகக் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி திமுக சார்பிலும், பள்ளிக் கல்வித்துறை சார்பிலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையிடம் (லஞ்ச ஒழிப்புத்துறை) புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகார்களின் அடிப்படையில் ஏடிஎஸ்பி இமானுவேல் சேகரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பெரியார் அறிவுலக நூலகத்தில் விசாரணை நடத்தினர். 3-வது மாடியில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் தொகை மற்றும் அதற்கான பில்களின் உண்மைத்தன்மை சோதித்தனர்.
மேலும் பெரியார் அறிவுலக அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புப் துறையினர் தொடர் விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து முக்கியப் புள்ளிகள் சிக்கக்கூடும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை பெரியார் அறிவுலகத்தில் தமிழ் நூல்கள் பிரிவில் இருந்த அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் 1800-க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் அகற்றப்பட்டன.இந்நிலையில், தமிழ் புத்தகங்களைத் தொடர்ந்து , ஐந்தாவது தளத்தில் இயங்கி வரும் ஆங்கில நூல்கள் பிரிவில் உள்ள வின்டேஜ் பிரஸ் லிமிடெட் என்ற பதிப்பகத்தின் புத்தகங்களும் போலியானவை என்ற புகார் எழுந்தது. இந்த புத்தகங்கள் போலி முகவரியுடன் இடம் பெற்றிருப்பதாகவும், புத்தகத்தில் AI மூலம் உருவாக்க பட்ட தரவுகள் மட்டும் இருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதனையடுத்து பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டிருந்த 257 போலி ஆங்கில புத்தகங்கள் இன்று அகற்றப்பட்டன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0