மேகதாது விவகாரம்: நவ.16 பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய்?

Nov 14, 2026 - 22:50
 0
மேகதாது விவகாரம்: நவ.16 பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய்?

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரும் நவம்பர் 16-ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் 13-ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அதன் ஒரு பகுதியாக மைசூரில் நடைபெற்ற விண்வெளி மற்றும் நவீன ஒளியியல் அறிவியல் மையத்தின் தொடக்க விழாவில் அவர் பங்கேற்றார். இதில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் பங்கேற்றார்.

அப்போது பேசிய டி.கே.சிவக்குமார், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும், மேகதாது அணைத் திட்டத்தைச் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மேகதாது அணை கட்டுவதற்கான இறுதி அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.

தமிழகத்திற்கு 177 டி.எம்.சி. காவிரி நீரைத் திறந்துவிட வேண்டிய நிபந்தனையை கர்நாடக அரசு நிச்சயம் கடைப்பிடிக்கும் என்றும், மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கே அதிக பயன் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் இந்தப் பேச்சு தமிழ்நாட்டில் மீண்டும் மேகதாது அணை விவகாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாகவும் மேகதாது அணை கட்ட யாருடைய அனுமதியையும் கேட்க வேண்டிய தேவையில்லை என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் குறிப்பிட்டிருந்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்த சூழலில், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் செயல்படுவதைப் போல, தமிழகத்திலும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து விவசாயிகளின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுடன், மேகதாது அணைக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் ஜூன் மாதம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தையும் பிரதமர் மோடியிடம் நேரில் அளிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்?
இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழக முதலமைச்சர் விஜய் வரும் நாளை  (நவ.16) டெல்லியில் நேரில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான முயற்சிகளைத் தடுக்கவும், இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தியை சந்திக்க திட்டம்

அதே நாளில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி எழுதிய Belonging என்ற நூலின் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0