பி.எம்.மன்னனுக்கு சம்மன் வழங்கிய நிலையில் இன்றே கைது செய்தது ஏன்? காவல் துறைக்கு நீதிமன்றம் கேள்வி
மதுரை: ரூ.15 கோடி குதிரை பேரம் தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பி.எம். மன்னனை, நீதிமன்றக் காவலில் வைக்க மறுத்த மதுரை மாவட்ட நீதிபதி ஜோசப் சாய், ரூ.25 ஆயிரம் சொந்த ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.
த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களிடம் மீண்டும் குதிரை பேரத்தில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் போது ஆதரவாக வாக்களிக்க ரூ. 15 கோடி தருவதாக தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகவும் மதுரை மத்திய தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பாக எம்.எல்.ஏ முஸ்தபா காவல் துறையிலும் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் பி.எம். மன்னனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அவரிடம் குதிரை பேரம் தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பின்னர், கைது செய்யப்பட்டதாக தெரிவித்த காவல்துறை பி.எம். மன்னனை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது பி.எம்.மன்னனை, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாவட்ட நீதிபதி ஜோசப் சாய், ரூ.25 ஆயிரம் சொந்த ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.இந்த வழக்கில் பி.எம்.மன்னனை நவம்பர் 7 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கெனவே சம்மன் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவரை இன்றே விசாரணைக்கு அழைத்து வந்து கைது செய்தது ஏன்? என நீதிபதி காவல் துறையினரிடம் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த பி.எம்.மன்னன், "குதிரை பேர வழக்கு சம்பந்தமாக என்னை விசாரிப்பதற்காக அழைத்து வந்தனர். என்னை நீதிமன்றக் காவலில் வைக்கக் கூடிய சூழல் ஏற்பட்ட போது, மதுரை நீதிமன்றம் என்னை விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பேன். இது தொடர்பாக மற்றபடி வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை.
மேலும்காலை 10 மணிக்கு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். அதன்படி ஆஜராக உள்ளேன்" என தெரிவித்தார்.முன்பு அழகிரியின் ஆதரவாளர் இன்று அதிமுக பிரமுகர்
பி.எம். மன்னன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர். மதுரை அரசியலில் அழகிரியின் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0