மதுரை நகைக்கடை கொள்ளைக்கு முன்பே நோட்டம்? 20 மணி நேரமாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்

Nov 13, 2026 - 22:43
 1
மதுரை நகைக்கடை கொள்ளைக்கு முன்பே நோட்டம்? 20 மணி நேரமாகியும் துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்

மதுரை: தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் 15 கிலோவுக்கும் மேல் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், 20 மணி நேரமாகியும் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்ட நபர், சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பே முகமூடி அணிந்து கடையை நோட்டமிட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்குள் நேற்று (நவ.12) அதிகாலை சுமார் 4 மணியளவில் புகுந்த மர்ம நபர் ஒருவர், 15 கிலோவுக்கு மேற்பட்ட தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். இந்தச் சம்பவம் மதுரை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

9 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரைப் பிடிப்பதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் இரவு முழுவதும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை நடந்த நகைக்கடையைச் சுற்றியுள்ள நேரு நகர், மாடக்குளம், பழங்காநத்தம், நாகமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் ரயில் நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் காவல் துறையினர் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளைக்கு முன்பே நோட்டமிட்ட மர்ம நபர்

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய திருப்பமாக, கடந்த 5ஆம் தேதி அதிகாலை நேரத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் நகைக்கடைக்கு வந்து, கொள்ளையடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கடையை நோட்டமிட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த கொள்ளைச் சம்பவம் திடீரென அரங்கேற்றப்பட்டதா அல்லது முன்கூட்டியே பல நாட்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்கூட்டியில் வந்து ரயிலில் தப்பினாரா?

கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஸ்கூட்டி மூலம் சம்பவ இடத்திற்கு வந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், கொள்ளைக்குப் பிறகு ஸ்கூட்டியை வேறு இடத்தில் நிறுத்திவிட்டு ரயில் மூலம் மதுரையை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அதிகாலை நேரங்களில் மதுரையிலிருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் அவை செல்லும் வழித்தடங்கள் குறித்தும் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழியர்கள், பாதுகாவலர்களிடம் விசாரணை

நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளையன் தனி ஒருவனாகச் செயல்பட்டது போன்ற தோற்றம் இருந்தாலும், அதன் பின்னணியில் கொள்ளைக் கும்பல் ஏதேனும் செயல்பட்டுள்ளதா? அல்லது காவல்துறையினரின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகத் தனி நபர் கொள்ளையில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வடமாநிலங்களில் தேடுதல் வேட்டை?

கொள்ளையில் ஈடுபட்ட நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வடமாநில காவல்துறையினரின் உதவியையும் மதுரை மாநகர காவல்துறையினர் நாடியுள்ளதாகவும் தெரிகிறது. இதுவரை சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் கொள்ளையன் குறித்த உறுதியான தகவலோ, முக்கியத் தடயமோ கிடைக்காததால் தனிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0