பாஜக ஆதரவுடன் திமுக, அதிமுக இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சி- நிர்மல் குமார் குற்றச்சாட்டு
மதுரை: பாஜகவின் ஆதரவோடு திமுகவும் அதிமுகவும் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருவதாக மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டினார்.
மதுரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கான முயற்சிகள் அனைத்து இடங்களிலும் நடைபெறுகின்றன. இதற்காக ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதும், பெங்களூருவில் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.தவெக எம்எல்ஏக்கள் பணத்துக்கு விலைபோக மாட்டார்கள். பாஜகவின் பின்புலத்துடன் திமுகவும் அதிமுகவும் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சிக்கின்றன. வரும் இடைத்தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்தும் திட்டமிட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.மிரட்டல் வருவதாக அமைச்சர் விஸ்வநாதன் கூறியது குறித்த கேள்விக்கு, "எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளால் திமுகவினரிடமிருந்தே பிரச்சினைகள் வருகின்றன. எப்போது தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க தவெக தயாராக உள்ளது" என்று அமைச்சர் நிர்மல் குமார் பதில் அளித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிரந்தரப் பணி கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கால அவகாசம் கேட்டுள்ளோம். மின்சாரத் துறையில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. துணை மின் நிலையங்களுக்கு உரிய தகவல் தெரிவிக்காமல் பிரேக்கர் மூலம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இனிமேல் உரிய பதிவேட்டில், பதிவு செய்யாமல் மின்சாரத்தை நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சிறையில் காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே சிறிய அளவிலான மோதல்கள் நடைபெறுகின்றன. சிறைத்துறை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யப்படுகிறது. தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் அமைப்பது தொடர்பாக மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முடிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்படும்.
டாஸ்மாக் காலி மதுபாட்டில்களுக்கு பணம் வசூலிக்கும் நடைமுறை 2003-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறது. 23 ஆண்டுகளாக உள்ள இந்த நடைமுறையை மாற்றும்போது எதிர்ப்புகள் வர தான் செய்யும். முந்தைய ஆட்சியில் பணியிட மாறுதல்களுக்கு ரூ.35 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாகப் புகார்கள் உள்ளன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
முந்தைய அரசின் திட்டங்களைப் பெயர் மாற்றும் நோக்கம் அரசுக்கு இல்லை. மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் திட்டங்களைச் சீரமைத்து செயல்படுத்தி வருகிறோம். கடந்த ஆறு மாதங்களில் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் அனைத்து தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும்" என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0