மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட பிரபல கடையில் 16 கிலோ நகைகள் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை
மதுரை: காளவாசல் புறவழிச்சாலையில் புதிதாக திறக்கப்பட்ட டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜுவல்லரியின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், சுமார் 16 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை காளவாசல் புறவழிச் சாலையில் தனிஷ்க் ஜுவல்லரி, சுமார் 70 சதவீதக் கட்டுமானப் பணிகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதன் நிர்வாகியாக சக்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், (நவம்பர் 10) இரவு வழக்கம் போல் கடையைப் பூட்டி விட்டு, ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து (நவ. 11) காலை ஊழியர்கள் வழக்கம் போல் கடைக்கு வந்தனர்.
சினிமா பாணியில் நடந்த கொள்ளை
அப்போது , நகைகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டிகள் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுமார் 16 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 25 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து உடனடியாக எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை உயர் அதிகாரிகள், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர். கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
மதுரை மாநகரக் காவல் ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர்கள் இனிகோ திவ்யன், வனிதா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கொள்ளையர்கள் நுழைந்தது எப்படி?
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கட்டிடத்தின் பின்பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரம் வழியாக மேல் தளத்திற்கு ஏறிய கொள்ளையர்கள், இன்னும் பயன்பாட்டுக்கு வராத லிஃப்ட் அமைப்பதற்கான பாதை வழியாகக் கீழே இறங்கி ஷோரூமிற்குள் நுழைந்தது தெரிய வந்தது.
அதிகாலை சுமார் 3 மணி அளவில் முகமூடி அணிந்து உள்ளே புகுந்த நபர்கள், நகைகள் வைக்கப்பட்டிருந்த உள்பக்கச் சுவர் மற்றும் கதவுகளை உடைத்துத் தங்க நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர். குறிப்பாக ஷெப்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகளில் இருந்து சுமார் 30 சதவீத நகைகளை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மொத்தம் 'டிஸ்பிளே'வில் சுமார் 48 கிலோ நகைகள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் 30 சதவீதம் என்பது தோராயமாக 16 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.3 உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைப்பு
இதனிடையே, தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் 3 ஏ.சி.க்கள் தலைமையில் 9 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் ராஜேந்திரன், "கடையின் பின்பக்கக் கதவு மற்றும் சுவரை உடைத்து உள்ளே புகுந்த மூன்று நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் துல்லியமான எடை மற்றும் மதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
கொள்ளைச் சம்பவத்தில் கடையில் வேலை பார்த்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடைபெறுகிறதா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, தற்போது எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது என்றும், விசாரணை முடிவடையாமல் யாருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூற முடியாது என்றும் காவல் ஆணையர் ராஜேந்திரன் விளக்கமளித்தார்.
முகமூடி, கையுறை அணிந்து டிராலி பேக்குடன் நடந்து சென்ற நபர்
போலீசார் கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலை நேரத்தில் கருப்பு நிறப் பை, முகமூடி, கையுறை அணிந்து, டிராலி பேக்குடன் ஒருவர் நடந்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்தக் காட்சியின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபரை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, கடை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, அதிகாலை நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. அந்த நபர் முகத்தை மறைக்கும் வகையில் முகமூடி அணிந்திருந்ததுடன், கைகளில் கையுறையும் அணிந்துள்ளார். மேலும், கருப்பு நிறப் பை மற்றும் டிராலி பேக்குடன் நடந்து செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.
இந்தக் காட்சியின் அடிப்படையில், கொள்ளையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற ஆரம்பகட்ட சந்தேகத்தைத் தாண்டி, தனிநபர் ஒருவரே திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், சிசிடிவி காட்சியில் பதிவான நபர்தான் கொள்ளையில் ஈடுபட்டவர் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையனை அடையாளம் காணும் முயற்சி
சந்தேக நபர் நடந்து செல்லும் காட்சிகள் பதிவான நேரம், இடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அந்தப் பகுதியில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, அவர் எந்தப் பகுதியிலிருந்து வந்தார்? எந்த வழியாக நகைக்கடையை அடைந்தார்? கொள்ளைக்குப் பிறகு எந்தத் திசையில் சென்றார்? என்பதைத் தொடர்ச்சியான கேமரா காட்சிகள் மூலம் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள நபரின் நடை, உடல் அமைப்பு, உயரம், அசைவு, நடக்கும் விதம் உள்ளிட்ட அடையாளங்கள் நுட்பமாக ஆய்வு செய்யப்படுகின்றன. முகமூடி அணிந்திருப்பதால் முகத்தை வைத்து அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உடல் மொழி மற்றும் நடையின் தனித்துவமான அம்சங்களைக் கொண்டு மற்ற கேமரா பதிவுகளில் உள்ள நபர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், அவர் எடுத்துச் சென்ற டிராலி பேக்கின் அளவு, வடிவம், நிறம், சக்கர அமைப்பு மற்றும் கருப்பு நிறப் பையின் தன்மை ஆகியவற்றையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோன்ற பைகளுடன் அந்தப் பகுதியில் வேறு யாரேனும் நடமாடியுள்ளனரா? என்பதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சரிபார்க்கப்படுகிறது.
வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்களில் விசாரணை
சந்தேக நபர் நீண்ட தூரம் நடந்து வந்தாரா? அல்லது குறிப்பிட்ட இடம் வரை வாகனத்தில் வந்து அங்கிருந்து நடந்து சென்றாரா? என்பதையும் போலீசார் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதற்காக சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அப்பகுதியில் சென்ற கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களின் சிசிடிவி பதிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அருகிலுள்ள சாலைகள், சந்திப்புகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கேமரா காட்சிகளையும் சேகரித்து சந்தேக நபரின் நடமாட்டத்தைத் தொடர்ச்சியாகக் கண்டறிய போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கைரேகை மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள்
கொள்ளையர் கையுறை அணிந்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், சம்பவ இடத்தில் கையுறை பயன்படுத்தாமல் வேறு ஏதேனும் பொருட்களைத் தொட்டுள்ளாரா? அங்கு கைரேகைகள் அல்லது பிற தடயங்கள் பதிவாகியுள்ளனவா? என்பது குறித்து தடய அறிவியல் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். கடையின் லிப்ட், மின்சாரக் கட்டுப்பாட்டு அமைப்புகள், கதவுகள், நகைகள் வைக்கப்பட்டிருந்த இடங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் தடயங்கள் சேகரிக்கப்படுகின்றன.
கடையில் பணியாற்றிய ஊழியர்கள், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட பொறியாளர்கள், எலெக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள் உள்ளிட்டோரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முகமூடி, கையுறை அணிந்து டிராலி பேக்குடன் அதிகாலை நேரத்தில் நடந்து செல்லும் நபரின் சிசிடிவி காட்சி தற்போது இந்தக் கொள்ளை வழக்கில் முக்கிய தடயமாக பார்க்கப்படுகிறது. அந்த நபரின் அடையாளம், அவர் வந்த வழித்தடம், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் கொண்டு செல்லப்பட்ட இடம் ஆகியவற்றைக் கண்டறிவதில் போலீசார் கவனம் செலுத்தி வருகின்றனர்.
முழுமையாக கட்டுமானப் பணிகள் நிறைவடையாத கட்டிடத்தில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஷோரூம் திறக்கப்பட்டதே கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மதுரை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள அனைத்துச் சாலைகளின் சிசிடிவி காட்சிகளும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0