திருச்சி சுற்றுலா தளம் முக்கொம்பு பாலம் பழுதான நிலையில் உள்ளது அரசு அதிகாரிகள் பழுது பார்ப்பார்களா?
திருச்சியின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், போக்குவரத்து மையமாகவும் விளங்கும் முக்கொம்பு காவேரி ஆற்றுப் பாலத்தில் பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஜீயபுரம் மற்றும் குணசீலம் பகுதிகளை இணைக்கும் வகையில் காவேரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில், இரவு பகலாக 24 மணி நேரமும் இடைவிடாது நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, கனரக வாகனங்கள் தினசரி இந்த பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றன.இந்த நிலையில், பாலத்தில் உள்ள மொத்தம் 41 தூண்களில், 35 மற்றும் 38 ஆகிய இரண்டு தூண்கள் லேசாக நகர்ந்து, தற்போதைய நிலையில் இருந்து சற்று விலகிய நிலையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த தூண்களில் லேசான விலகல் கண்டறியப்பட்ட போதிலும், அதன் மீது தொடர்ந்து கனரக வாகனங்கள் அதிர்வுடன் சென்று வருவதால், இந்த விலகல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தத் தூண்கள் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதால்எந்த நேரத்திலும் அசம்பாவிதம் நேரலாம் என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் பாலத்தைக் கடந்து செல்கின்றனர். முக்கொம்புக்கு தினசரி நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் நிலையில், இந்த ஆபத்து பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பதற்கு முன்பாக பொதுப்பணித்துறை (PWD) நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும், போர்க்கால அடிப்படையில் பாலத்தின் தூண்களைச் சீரமைத்து வாகன ஓட்டிகளின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0