அன்பில் மகேஸ் ஜாமீன் கோரிய மனு - விசாரணை நவம்பர் 17-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Nov 12, 2026 - 21:47
 0
அன்பில் மகேஸ் ஜாமீன் கோரிய மனு - விசாரணை நவம்பர் 17-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: தனியார் பள்ளிகளிடம் பெற்ற பணம் எங்கே சென்றது? என முத்துக்குமாரிடம் விசாரிக்க வேண்டும் என்பதால் அன்பில் மகேஸுக்கு ஜாமீன் வழங்க கூடாது என காவல் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணையை வரும் 17-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் அக்டோபர் 26ம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் ஜாமீன் கோரி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், "இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த குற்றத்தில் அன்பில் மகேஸை தொடர்புபடுத்துவதற்கான ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது. வழக்கின் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது.

வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்ததில், தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து பெருந்தொகை வசூலிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது. அந்த தொகை கட்சி நிதி என்ற பெயரில், அன்பில் மகேஸை சென்றடைந்துள்ளது என சாட்சிகள் வாக்குமூலங்கள் அளித்துள்ளனர்.இந்த வழக்கில் அரசு ஊழியரான முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் தொடர்பு, அரசகுமாரின் குற்றப் பின்னணி, அன்பில் மகேஸ் கைதுக்குப் பிறகு முத்துகுமார் சரணடைந்தது, இந்த பொருளாதாரக் குற்றத்தின் தீவிரத்தைக் காட்டுகின்றன. இந்நிலையில் சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க நபரான அன்பில் மகேஸுக்கு ஜாமீன் வழங்கினால் அது விசாரணை பாதிக்கும்" என கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அன்பில் மகேஸ் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ஜாமீன் மனுவை விரைவாக விசாரணைக்கு எடுக்க வேண்டும். காலதாமதம் செய்யும் நடவடிக்கையை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினார்.

அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும். தலைமறைவாக இருந்த முத்துக்குமார் மற்றும் சரவணன் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். முத்துக்குமாரை காவலில் எடுக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முத்துக்குமாரிடம் காவல் துறை விசாரணை செய்ய வேண்டும் என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, முத்துக்குமார் தலைமறைவாக இருந்ததால் தான், அன்பில் மகேஸின் முன் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சரண்டைந்து வருகின்றனர். அதனால், காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 17ம் தேதி ஒத்திவைத்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0