சேதமடைந்த பிரதான கதவு; கார் பார்க்கிங்காக மாறிய வைகை ஆறு - தமிழக அரசுக்கு சு. வெங்கடேசன் கோரிக்கை

Oct 21, 2026 - 22:38
 2
சேதமடைந்த பிரதான கதவு; கார் பார்க்கிங்காக மாறிய வைகை ஆறு - தமிழக அரசுக்கு சு. வெங்கடேசன் கோரிக்கை

மதுரை: வைகை ஆற்றில் கார் பார்க்கிங் செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது வைகை ஆறு. இந்த ஆற்றில் அழகர் இறங்கும் பகுதியில் உள்ள பிரதான கதவு திறக்கப்பட்டு அதன் வழியாக வாகனங்கள் ஆற்றுக்குள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

மேலும், இது தொடர்பாக புகைப்படங்களுடன் தகவல் வெளியானதைத் தொடர்ந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கேடசன் இந்த பிரச்சனையில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

ஆற்றுக்குள் கார் பார்க்கிங்; புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை

இந்நிலையில், அவரது புகாரைத் தொடர்ந்து ஆற்றுப் படுகையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அகற்றப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்த நிலையில், அதே இடத்தில் மீண்டும் கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக புகைப்படங்கள் வெளியாகின. இதனால், வைகை ஆற்றை பாதுகாப்பதில் அதிகாரிகளின் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.இதனைத் தொடர்ந்து, மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் வைகை ஆற்றுக்குச் செல்லும் பிரதான கதவு திறக்கப்பட்டு, அதன் வழியாக வாகனங்கள் ஆற்றுப் படுகைக்குள் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தன. இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளரைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டுள்ளார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “வைகை நதியில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இருக்கும் கதவுகள் திறக்கப்பட்டு, நதிக்குள்ளே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நதி கார்ப் பார்க்கிங்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று நாளிதழ் ஒன்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது.

அதைப் பார்த்ததும் பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளரிடம் பேசினேன். அந்தக் கதவின் சாவிகள் பொதுப்பணித்துறை, மாநகராட்சி, காவல்துறை ஆகிய மூவரிடமும் இருக்கிறது. நாங்கள் திறந்துவிடவில்லை என்று கூறிய அவர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து, உள்ளே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு எனக்குப் புகைப்படம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

ஆனால், இன்று காலை மீண்டும் அதே இடத்தில், வைகை நதியில் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளதையும், வைகை ஆற்றுக்குள் செல்லும் பிரதான கதவு முழுமையாகத் திறந்திருப்பதையும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து அனுப்புகிறார்கள்.வைகை நதியைப் பார்க்கிங்காகப் பயன்படுத்தக் காரணமானவர்கள் மீதும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீதும் மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுருந்தார்,

மாவட்ட ஆட்சியர் விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக சு. வெங்கடேசன் எம்.பி. எழுப்பிய புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளதாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “வைகை நதியில் கார் பார்க்கிங் செய்யப்படுவதைப் பற்றிய எனது பதிவின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த விபரத்தை மாவட்ட ஆட்சியர் தெரியப்படுத்தியுள்ளார்.

அதன்படி, மதுரை மாநகராட்சி அதிகாரிகளும், மதுரை வடக்கு வட்டாட்சியரும் வைகை ஆற்றில் கார் பார்க்கிங் செய்யப்பட்டுள்ள இடத்தைப் பார்வையிட்டு, வைகை ஆற்றுப் படுகையில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களும் அகற்றப்பட்டதை உறுதி செய்துள்ளனர். முதன்மைக் கதவு சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதவாறு, மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகப் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொண்டு, கதவைப் பாதுகாப்பான நிலைக்குக் கொண்டுவரும் என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியரின் உடனடி தலையீட்டுக்கு நன்றி. கதவைச் சேதப்படுத்தியது யாரெனக் கண்டறிவது கடினமல்ல, எதிரிலேயே சிசிடிவி (சிசிஜிக்ஷி) கேமராக்கள் உள்ளன. நதியைப் பாதுகாத்து நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள நீர்வளத்துறை இது சார்ந்து ஏன் உரிய புகார் அளிக்கவில்லை?

இது போன்ற கேள்விகள் பதிலின்றி நிலைக்கின்றன. இந்தப் பிரச்சினை தொடராமல் இருக்க உறுதியான, நிரந்தரதீர்வுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0