சோப்பு, ஷாம்புவால் ஆற்றில் நுரை வருவதாக கூறிய அமைச்சர்: நோபல் பரிசு வழங்க செல்லூர் ராஜு பரிந்துரை
மதுரை:29
பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புவால்தான் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் கூறிய நிலையில், அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டலாக தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ள நீருடன் சேர்ந்து அதிக அளவில் நுரையும் நொய்யல் ஆற்றில் காணப்படுகிறது. ரசாயனக் கழிவுகள் கலப்பதாலேயே நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், "மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு தண்ணீரில் கலக்கும்போது நுரை வருகிறது" என புதிய விளக்கத்தை அளித்திருந்தார்.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் இதுதொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “ஷாம்பு, சோப்பால் நொய்யல் ஆற்றில் நுரை வருவதாக அமைச்சர் சொல்றாருங்க. இது உலக மகா கண்டுபிடிப்பு அல்லவா? அந்த அமைச்சருக்கு கட்டாயம் நோபல் பரிசு கொடுக்கணும். இதை எல்லாம் நாங்க பார்க்க வேண்டியது இருக்கு.
நானும் முன்னாள் அமைச்சராக இருந்தவன் தான். ஒருமுறை எகிப்துனு சொல்றதுக்கு பதிலாக எஜிப்துனு சொல்லிட்டேன். அதை வைச்சு என்னை அந்த அளவுக்கு கிண்டல் பண்ணாங்க.
அதேபோல, அதிகாரிகளின் அறிவுரை பேரில் ஏரியில் தெர்மாகோல் போட்டதை வச்சி பல ஆண்டுகளாக கிண்டல் செஞ்சாங்க"
ஆனால், இப்போது அமைச்சர் இப்படிய பேசியது பற்றி யாரும் ஒன்னும் சொல்ல மாட்டீங்களா?" என அவர் கேள்வியெழுப்பினார்.
விலை உயர்வுதான் தீபாவளி பரிசு
தொடர்ந்து செல்லூர் ராஜு பேசுகையில், "தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
நான்கு மாத ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு விஜய் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
விலை உயர்வையே தீபாவளிப் பரிசாக மக்களுக்கு தவெக அரசு வழங்கியுள்ளது. வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். ஆனால், தற்போது வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது.
நாள்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. பெண்கள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை" என செல்லூர் ராஜு விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர், தனுஷை பார்த்து அதிமுகவினருக்குப் பயம் இல்லை என்றும், தவெகவினர் தான் பயப்படுவதாகவும் தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0