அமைச்சர்களின் பெயரைச் சொல்லி ஊழல் செய்தால் அவ்வளவு தான் - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் 'வார்னிங்

Oct 29, 2026 - 22:52
 1
அமைச்சர்களின் பெயரைச் சொல்லி ஊழல் செய்தால் அவ்வளவு தான் - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் 'வார்னிங்

சென்னை: 
அமைச்சர்களின் பெயரை சொல்லி அவர்களின் உறவினர்கள், உதவியாளர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய அதிகாரிகள் யாரும் லஞ்சம், ஊழலில் ஈடுபடக் கூடாது; அமைச்சர்கள் தங்கள் துறைகளைக் கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் 47 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர்களுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்போது, அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களது உறவினர்கள், உதவியாளர்கள், நண்பர்கள், நெருங்கிய அதிகாரிகள் யாரும் லஞ்சம், ஊழலில் ஈடுபடக் கூடாது என முதலமைச்சர் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அமைச்சர்கள் தொடர்ந்து தங்கள் துறையை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.அதிகாரிகளின் பணியிட மாற்றங்களில் அமைச்சர்கள் தலையிடக் கூடாது என்றும் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.அமைச்சர்கள் உட்பட அனைவரது செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும் என்றும், அறிவுறுத்தல்களை மீறிச் செயல்பட்டால் இலாகா மாற்றம் செய்யவும் தயங்கமாட்டேன் என்றும் முதலமைச்சர் எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்கள், மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மழைக்காலம் என்பதால், மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

ஒவ்வொரு அமைச்சரிடமும் தனித்தனியாக அவரவர் துறைகளில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் கேட்டறிந்ததாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகளைக் கவனத்துடன் அணுகி, துறைகளின் செயல்பாடுகளைச் சீராகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்களைக் கண்டு மனம் தளராமல், துணிச்சலுடனும் பொறுப்புடனும் பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர்களிடம் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.அமைச்சர்கள் தங்கள் துறைகளில் நிர்வாகச் செயல்பாடுகளை தீவிரமாகக் கண்காணித்து, பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதுடன், ஊழல் புகார்களுக்கு இடமளிக்காமல் செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

டெண்டர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும், கமிஷன், ஊழல் இல்லாத வகையில் செயல்பட வேண்டும் என்றும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0