தந்தை பிரிட்டன் குடிமகனாக மாறினார் என்பதற்காக மட்டும் சிறுவனின் இந்திய குடியுரிமையை பறிக்க முடியாது - மதுரை அமர்வு

Oct 21, 2026 - 22:31
 3
தந்தை பிரிட்டன் குடிமகனாக மாறினார் என்பதற்காக மட்டும் சிறுவனின் இந்திய குடியுரிமையை பறிக்க முடியாது - மதுரை அமர்வு

மதுரை: தந்தை பிரிட்டன் குடியுரிமை பெற்றார் என்ற ஒரே காரணத்திற்காக, அவரது குழந்தையின் இந்தியக் குடியுரிமையைப் பறிக்கவோ அல்லது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுக்கவோ முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

மதுரையை சேர்ந்த என்.எஸ். குருதேவ் நாகையா சண்முகம் என்பவர், தனது 10 வயது மகன் ஆருஷ் சண்முகம் குருதேவ் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

பாஸ்போர்ட் புதுப்பிக்கக் கோரி வழக்கு

அந்த மனுவில், ‘சிறுவனின் பாஸ்போர்ட் புதுப்பிப்பு விண்ணப்பத்தைப் பரிசீலித்து, புதிய பாஸ்போர்ட் வழங்க மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

மேலும், சிறுவன் 2016 ஜனவரி 23ஆம் தேதி சேலத்தில் பிறந்துள்ளார். அவர் பிறந்த போது அவரது தந்தையும் தாயும் இந்தியக் குடிமக்களாக இருந்துள்ளனர். சிறுவனுக்கு 2021 அக்டோபர் 5-ஆம் தேதி லண்டனில் இந்தியப் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அந்த பாஸ்போர்ட் 2026 அக்டோபர் 4-ஆம் தேதியுடன் காலாவதியாகியுள்ளது.

இதையடுத்து, 2026 ஆகஸ்ட் 3-ஆம் தேதி பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பிக்கப்பட்டது. அந்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்தை நாடியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தனி நீதிபதி செந்தில்குமார் இராமமூர்த்தி கீழ் விசாரணைக்கு வந்தது.

தந்தை பிரிட்டன் குடியுரிமை பெற்றதால் சிக்கல்

அப்போது மனுதாரர் தரப்பில், சிறுவனின் தந்தை 2021 மே 7-ஆம் தேதி பிரிட்டன் குடியுரிமையை பெற்றுள்ளார். இருப்பினும், சிறுவனின் தாய் இந்தியக் குடியுரிமையுடன் தொடர்ந்து இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, 1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 8-ன் உட்பிரிவு (2)-ஐ சுட்டிக்காட்டிய மதுரை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி தரப்பு வழக்கறிஞர் ராமநாதன், ஒருவர் இந்தியக் குடியுரிமையை இழந்த சூழலில், அவரது மைனர் குழந்தையின் குடியுரிமையும் தானாகவே முடிவுக்கு வரும் என்பதற்கு சட்ட விதிகள் பொருந்தும் என்று வாதிட்டார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ். அனுஷா, ”இந்தியக் குடியுரிமையை முறைப்படி துறப்பதற்கும், வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெறுவதற்கும் இடையே சட்டரீதியான வேறுபாடு உள்ளது.

மனுதாரர் குடியுரிமையை இழந்தது பிரிவு 8-ன் கீழ் அல்ல, மாறாக பிரிவு 9-ன் கீழ் வருகிறது. சிறுவனின் தந்தை குருதேவ் நாகையா சண்முகம் இந்திய குடியுரிமையை துறந்ததன் மூலம் அல்ல, ஹிரி குடியுரிமையை பெற்றதன் மூலமே இந்தியக் குடியுரிமையை இழந்தார்.

பிரிவு 9-ல் ஒருவர் குடியுரிமையை இழக்கும் போது, அவரது குழந்தையும் தானாகவே இந்திய குடியுரிமையை இழக்கும் என்று குறிப்பிடவில்லை” என்றும் வாதிட்டார்.குடியுரிமைச் சட்டத்தின் பிரிவுகளை விளக்கிய நீதிமன்றம்

பின்னர், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் 3, 8 மற்றும் 9-வது பிரிவுகளைப் பரிசீலித்தார்.

சிறுவன் பிறந்த போது அவரது பெற்றோர் இருவரும் இந்தியக் குடிமக்களாக இருந்ததால், பிறப்பின் அடிப்படையில் அவர் இந்தியக் குடியுரிமையை பெற்றுள்ளார். இந்தியக் குடியுரிமையை முறைப்படி துறப்பது தொடர்பான விதிகளை உள்ளடக்கியது 8-வது பிரிவு. ஒருவர் வெளிநாட்டுக் குடியுரிமையை பெறுவது தொடர்பான சட்ட அம்சங்களை 9-வது பிரிவு கையாள்கிறது. எனவே, இந்த வழக்கு பிரிவு 8-ல் அல்ல, பிரிவு 9-ல் மட்டுமே பொருந்தும்.

எனவே, தந்தை பிரிட்டன் குடியுரிமையைப் பெற்று விட்டார் என்ற ஒரே காரணத்தை கொண்டு மட்டும், ஏற்கெனவே இந்தியக் குடியுரிமையைப் பெற்றுள்ள சிறுவனின் குடியுரிமையைப் பறிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் கேரள உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த தீர்ப்பையும் மதுரை அமர்வு பரிசீலித்தது.

மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க உத்தரவு

தொடர்ந்து, வழக்கின் விவரங்களையும் சட்ட விதிகளையும் ஆராய்ந்த நீதிபதி, சிறுவனின் பாஸ்போர்ட் புதுப்பிப்பு விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின்படி, மைனர் குழந்தையின் கடவுச்சீட்டு புதுப்பித்தல் விண்ணப்பத்தை பரிசீலிப்பதில் எந்தத் தடையும் இல்லை.

மேலும், நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதிபதி, கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால், அவற்றை மனுதாரர் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கடந்த 13 ஆம் தேதி வழங்கப்பட்ட இந்த உத்தரவு வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற்ற பெற்றோரின் குழந்தைகளின் குடியுரிமை தொடர்பான விவகாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் பெற்றோரின் குடியுரிமை நிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சிறாரின் இந்தியக் குடியுரிமையை மறுக்க முடியாது என்பதையும், குடியுரிமைச் சட்டத்தின் உரிய பிரிவுகளைச் சரியாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0