உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து

Oct 22, 2026 - 22:53
 3
உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து

மதுரை: உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியகுளத்தைச் சேர்ந்த வினோத் ராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க வலியுறுத்தி பெரியகுளத்தில் தமிழ் தேசிய மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 11.2.2024-ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து சட்டவிரோதமாக கூடி பிளக்ஸ் பேனர் வைத்ததாகவும், காவல் துறையினரை மிரட்டியதாகவும், காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்காவிட்டால் வாகனங்களுக்கு தீ வைப்பதாக மிரட்டியதாகவும் எங்கள் மீது தேனி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டம் ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து நெரிசலோ, வன்முறை சம்பவங்களோ நடைபெறவில்லை. எனவே தேனி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் வாதிடுகையில், ‘உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி நடத்தப்பட்ட இது ஒரு ஜனநாயக ரீதியிலான போராட்டமாகும். போலீஸில் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் பொது மக்களில் எவரும் சாட்சிகளாக விசாரிக்கப்படவில்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.

பின்னர் நீதிபதி, ‘மனுதாரரும் ஓர் அமைப்பை சேர்ந்த மற்றவர்களும் உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி சட்டவிரோதமாகக் கூடிப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கில் சாட்சிகளாகப் சேர்க்கப்பட்டுள்ள அனைவரும் காவல் துறையைச் சேர்ந்தவர்களே ஆவர்.

இந்தச் சூழலில், மனுதாரருக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்துவது சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதற்கே வழிவகுக்கும். இது வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் பொருந்தும். எனவே, தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு மொத்தமாக ரத்து செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0