த.வெ.க., எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்: யாரிடமும் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கவில்லை என உறுதியளித்த அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரிடமும் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கவில்லை என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
கெம்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 35.80 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்று புதிய வகுப்பறை கட்டடங்களை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நேற்று முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தை குறித்து பேசினார்.
த.வெ.க சட்டபேரவை உறுப்பினர்கள் மீது தொடர்ச்சியாக வரும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, இந்த கூட்டத்தை முதலமைச்சர் விஜய் கூட்டியிருந்தார். இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “முதல்வர் தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்தில், அவர்களிடம் இருந்து எந்தவொரு வெற்று பேப்பரிலும் கையெழுத்து வாங்கப்படவில்லை.ஊடகங்கள் மட்டுமே இது போன்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றன. நான் ஆரம்பம் முதல் அருகிலேயே இருந்தேன். ஆறு அமைச்சர்கள் உடன் இருந்தனர். எல்லோரும் பேசும்போது என்ன தேவை என்பதை கேட்டார்கள். வெற்று பேப்பரில் கையெழுத்து மற்றும் பாண்டு பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக பத்திரிகைகள் எழுதுவதற்கு நாங்கள் பதில் சொல்ல இயலாது.எந்த ஆட்சியாக இருந்தாலும் சட்டப்பேரவை உறுப்பினர்களை அழைத்து பேசுவது முதல்வரின் வழக்கம். இது நடைமுறையில் இருக்கின்ற ஒன்று. எம்.எல்.ஏ-க்கள் யாரும் முதல்வரை தனியாக சந்திக்கவில்லை. இது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுதான்” என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் அளித்துள்ளது தொடர்பான கேள்விக்கு சட்டமன்ற உறுப்பினரிடம் விளக்கம் பெற்ற பிறகு மாவட்ட ஆட்சியர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பதிலளித்தார்.
மேலும், உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “உள்ளாட்சி பதவிக்காலம் முடிந்த நிலையில், தனி அலுவலர்கள் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. எல்லா ஆட்சிக் காலத்திலும் இது நடந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ஐந்து ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. நகராட்சி மாநகராட்சி பேரூராட்சிகளில் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதி வரை உள்ளது” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0