எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய பிரதமர் அலுவலகம் அனுமதி
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2014 முதல் 2018- வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகளுக்கான டெண்டர்கள் ஒதுக்கியதில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன், அப்போதைய பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) கே.எஸ். கந்தசாமி மற்றும் கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையர் கே. விஜய கார்த்திகேயன் ஆகிய இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை (ஞிக்ஷிகிசி) குற்றப்பத்திரிகை தயார் செய்தது.
அதிகாரிகள் மீது வழக்குத் தொடர உரிய அனுமதி பெறுவதில் பல ஆண்டுகளாகத் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது
கடந்த செப்டம்பர் 16, 2026 அன்று நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் இணைச் செயலாளர் சுசில் குமார் படேல் காணொலி மூலம் ஆஜரானார். அகில இந்தியப் பணி அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடரச் சட்டப்பூர்வ அனுமதி வழங்கும் அதிகாரம் பிரதமர் அலுவலகத்திற்கு மட்டுமே உள்ளது என அவர் தெரிவித்தார்.தமிழக அரசு அனுப்பிய ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கருத்துக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு சென்று இறுதி அனுமதி வழங்கப்படும் எனவும் மத்திய அரசு உறுதி அளித்தது.
இதனைப் பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கும் நடைமுறையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு, 2025 நவம்பர் முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கி விட்டதாகவும், அதற்கான அனுமதியை பொதுத்துறைக்கு ஈ-மெயில் மூலமாக மத்திய அரசு நவம்பர் 11 ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து நீதிபதி, குற்ற வழக்குகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி பெறுவதற்கு எவ்வளவு முயற்சி தேவைப்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம். ஏழை மக்களுக்கு எதிராக வேகமாக நடவடிக்கைகள் எடுக்கும் அரசு இயந்திரம், செல்வாக்கு மிக்கவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதே இல்லை. இந்த வழக்கில் தீர்வை எட்டுவதற்கு இந்த நீதிமன்றம் மிகவும் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது எனவும் வேதனை தெரிவித்தார்.
மேலும், இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கிடைத்த நிலையில், உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும். சம்மந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்த நடவடிக்கை குறித்து டிசம்பர் 4 ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0