தருமபுரியில் ரூ.2,000 கோடியில் WEG நிறுவனத்தின் உற்பத்தி ஆலை; 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு

Nov 12, 2026 - 21:50
 0
தருமபுரியில் ரூ.2,000 கோடியில் WEG நிறுவனத்தின் உற்பத்தி ஆலை; 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை: பிரேசில் நாட்டை சேர்ந்த உலகளாவிய மின்சார உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான WEG, தனது உலகளாவிய உற்பத்தி முதலீட்டுத் திட்டத்தை தருமபுரியில் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் ரூ.2,000 கோடி முதலீடு செய்யவும், சுமார் 3,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தொழில்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "உலகின் மிகப்பெரிய மின் சாதனங்கள் மற்றும் தொழில்துறை தானியங்கி தீர்வுகளைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக WEG நிறுவனம் விளங்குகிறது. பிரேசில் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், மின்மோட்டார் தயாரிப்பு நிறுவனமாகத் தொடங்கி, தற்போது 135-க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவைகளை வழங்கும் பன்முக உலகளாவிய பொறியியல் நிறுவனமாக வளர்ந்துள்ளது. 1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் 50,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் WEG நிறுவனத்தின் துணை நிறுவனமாக WEG India, 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முதல் உற்பத்தி ஆலை 2011-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஓசூரில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, ஓசூரில் உள்ள SIPCOT தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக, 2022 ஜூலை மாதம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, ரூ.650 கோடி முதலீடு செய்து 650 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கத் திட்டமிடப்பட்டது.

தற்போது ஓசூரில் செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலையைத் தொடர்ந்து, தருமபுரி SIPCOT தொழிற்பேட்டையில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பெரிய புதிய உற்பத்தி ஆலையை அமைக்க WEG நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.2,000 கோடி முதலீடு செய்யப்படுவதுடன், 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய ஆலையில் மின்சார வாகனங்களுக்கான மோட்டார்கள் (EV Motors), தொழில்துறை இயக்கிகள் (Industrial Drives) மற்றும் மின் உற்பத்தி உபகரணங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் உலகளாவிய மின் சாதனங்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டின் நிலை மேலும் வலுப்பெறும்.

இந்த முதலீட்டை மேற்கொள்வதற்காக WEG நிறுவனம் பல்வேறு மாநிலங்களைப் பரிசீலித்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக தொழில்துறை அமைச்சர், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் நிறுவனத்தின் நிர்வாகத்துடன் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதன் முடிவில், தனது உற்பத்தி விரிவாக்கத்தை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்குத் தமிழ்நாட்டையே விருப்பமான மாநிலமாக WEG நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்த முதலீடு ஒப்பீட்டளவில் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியின் தொழில் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநிலத்தின் உற்பத்தித் திறனையும் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க உதவும்.

இந்தத் திட்டத்தின் மூலம் உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாகும். திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதுடன், வேலைவாய்ப்புக்காக வளர்ச்சியடைந்த தொழில் நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதையும் குறைக்க உதவும்.

மேலும், இத்திட்டம் சார்ந்த உதிரிபாகங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்கும் துணைத் தொழில் நிறுவனங்கள் உருவாகவும், உள்ளூர் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) வலுப்பெறவும், புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகவும் வழிவகுக்கும்.

இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் தொழில்மயமாக்கல் வேகமடைவதுடன், பிராந்தியங்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறைந்து, அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமூகப் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். மாநிலம் முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட வெற்றி தமிழகம் – தொலைநோக்குத் திட்ட ஆவணத்தின் இலக்குகளுக்கும் இந்த முதலீடு வலுசேர்க்கும்.தமிழக அரசின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முனைப்பான அணுகுமுறையும், முதலீடுகளை எளிதாக்குவதிலும் நிறுவனங்களின் நீண்டகால விரிவாக்கத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதிலும் தமிழக அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டின் மீதான WEG நிறுவனத்தின் நம்பிக்கையுமே இந்த முதலீடு தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0