“பெயரை மட்டும்தான் ‘வெற்றி’ என மாற்ற முடியும்” - தவெக அரசு மீது பழனிசாமி சாடல்

Nov 12, 2026 - 21:52
 0
“பெயரை மட்டும்தான் ‘வெற்றி’ என மாற்ற முடியும்” - தவெக அரசு மீது பழனிசாமி சாடல்

சென்னை: “திறமை இல்லாத ஓர் அரசாங்கம்தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆறு மாத கால ஆட்சியில் மக்கள் பட்ட துன்பம்தான் ஏராளம். இவர்களால் வெற்றி என்று பெயரை மட்டும்தான் மாற்ற முடியும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகவும் மோசமான ஆட்சி நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. போதைப்பொருள் விற்பனை அதிகமாக நடைபெறுகிற காரணத்தால்தான் இப்படிப்பட்ட செயல்களும் நடைபெறுகிறது.

தவெக அரசை அனைத்து கட்சித் தலைவர்களும் கண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். அறிக்கை விடுகின்றனர். செய்தியாளர்களை சந்திக்கும்போது கண்டிக்கின்றனர். ஆனால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

திறமை இல்லாத ஓர் அரசாங்கம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆறு மாத கால ஆட்சியில் மக்கள் பட்ட துன்பம்தான் ஏராளம். விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றைதான் மக்கள் சந்திக்கிறார்கள்.

அரசு பொறுப்பேற்று 6 மாத காலம் ஆகியும், ஒரு பெரிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அவர்கள் என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்?” என்றார்.

பல திட்டங்களுக்கு ‘வெற்றி’ என பெயரிடப்படுவது குறித்த கேள்விக்கு, “இவர்களால் வெற்றி என பெயரை மட்டும்தான் மாற்ற முடியும். அதைத் தவிர தமிழகத்துக்கு அவர்களால் வேறு எதையும் கொடுக்க முடியாது” என்று கூறினார்.

மேலும், “அதிமுக சார்பில் தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா என கேட்கிறீர்கள். எதை பொது வெளியில் பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்பதற்கு ஒரு வரைமுறை உள்ளது. எனவே, சில கருத்துகளை இப்போது தெரிவிக்க முடியாது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து செங்கோட்டையன் பேசியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. அத்தகைய சூழல் வரும்போது அனைத்து ஊடக நண்பர்களையும் அழைத்து தெளிவாகத் தெரிவிப்போம்” என்றார் பழனிசாமி.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0