மதுரை, அக். 22
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளில் 500 ரோபோட்டிக் அறுவைசிகிச்சைகளைச் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவ இயக்குனரும், குடல் மறட’றம் இரைப்பை சிகிச்சை பிரிவு டாக்டருமான ரமேஷ் அர்த்தநாரி, டாக்டர் மோகன் ஆகியோர் கூறியதாவது:
குடல், கல்லீரல், சிறுநீரகம், மகளிர் மருத்துவம், மார்பகம் மற்றும் தைராய்டு, குழந்தைகள் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவைசிகிச்சை, இதயவியல் என பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் மிகத் துல்லியமான மருத்துவச் சேவைக்காக நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
தென் தமிழகத்தில் ரோபோ உதவியுடன் செய்யப்படும் பல அறுவைசிகிச்சை முறைகளை முதன்முதலில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை அறிமுகப்படுத்தியது. கணையம், உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகளில் ஏற்படும் சிக்கலான பிரச்னைகளுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை முதல்முறையாகப் பயன்படுத்திய பெருமை இம்மருத்துவமனையையே சாரும்.
2016ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள 'டா வின்சி' ரோபோட்டிக் சிஸ்டம் மூலம் சுமார் 350 அறுவைசிகிச்சைகளும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன 'டூமாய்' ரோபோட்டிக் சிஸ்டம் மூலம் 150க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நவீன கருவிகள், வழக்கமான மற்றும் லேப்ராஸ்கோப்பிக் தொழில்நுட்பங்களுக்கு பக்கபலமாக இருப்பதுடன், நோயாளிகளின் தனிப்பட்ட உடல்நிலைக்கேற்ப மிகச்சிறந்த சிகிச்சை முறையைத் தேர்வு செய்ய மருத்துவக் குழுவினருக்கு இவை பெரிதும் உதவுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சைகளையும் எங்களால் மிகத்துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய முடிந்தது. இனிவரும் காலங்களில் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கும் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த உள்ளோம். ரோபோட்டிக் அறுவைசிகிச்சை துல்லியம், மேம்பட்ட கருவி கட்டுப்பாடு மேம்படுத்தப்பட்ட முப்பரிமாணக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் வகையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. சிக்கலான அறுவைசிகிச்சைகளைக் கூட மருத்துவர்களால் எளிதாகச் செய்ய முடிகிறது. இத்தொழில்நுட்ப வளர்ச்சியானது எதிர்காலத்தில் 'டெலி-சர்ஜரி' எனப்படும் தொலைதூர அறுவைசிகிச்சைகளுக்கும் வழிவகுக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். டாக்டர்கள் பிரதீப், ஜெகதீஷ் சந்திரபோஸ், பால் வின்சென்ட், விஜய பாஸ்கர், பத்மா ஆகியோர் உடனிருந்தனர்.