பயணச்சீட்டுப் புத்தகங்கள் மாயமான விவகாரம் - போக்குவரத்துக் கழக இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவு

Oct 22, 2026 - 22:48
 2
பயணச்சீட்டுப் புத்தகங்கள் மாயமான விவகாரம் - போக்குவரத்துக் கழக இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பயணச்சீட்டுப் புத்தகங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த அசோக் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த அருள்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் அசோக்கிடம் இருந்து 1 லட்சத்து 11 ஆயிரத்து 198 ரூபாய் மதிப்பிலான பயணச்சீட்டுப் புத்தகங்களும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் அருள்குமாரிடம் இருந்து 77 ஆயிரத்து 855 ரூபாய் மதிப்பிலான பயணச்சீட்டுப் புத்தகங்களும் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, காணாமல் போன தொகையை அசோக் மற்றும் அருள்குமாரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய போக்குவரத்துக் கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணம் காணாமல் போனதற்கு, தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, தங்களின் காணாமல் போன பயணச்சீட்டுப் புத்தகங்களின் மதிப்பை ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யத் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி பி. புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், பேருந்துகளில் பாதுகாப்புப் பெட்டக வசதி இல்லாததால் பயணச்சீட்டுப் புத்தகங்கள் திருடு போகின்றன. நாங்கள் பயணச்சீட்டு புத்தகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக உடனடியாக போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்ததுடன், காவல் நிலையத்திலும் இதுத் தொடர்பாக புகார் அளித்திருந்தோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, மனுதாரர்கள் தரப்பை கேட்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி பி. புகழேந்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் பயணச்சீட்டுப் புத்தகங்கள் காணாமல் போனதாகப் பதிவாகி உள்ள சம்பவங்களின் எண்ணிக்கை, அவற்றைத் தடுக்க நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், பயணச்சீட்டு புத்தகங்கள் காணாமல் போவதை தவிர்க்க நடத்துநர்களுக்கு பாதுகாப்புப் பெட்டகம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை போக்குவரத்துக் கழகம் ஆராய வேண்டும் என்றுத் தெரிவித்து, இந்த வழக்குகளின் அடுத்த விசாரணையை நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0