தவெக அரசின் 6 மாத ஆட்சி என்பது தமிழகத்தின் துயரம் - எடப்பாடி பழனிசாமி

Nov 11, 2026 - 22:23
 0
தவெக அரசின் 6 மாத ஆட்சி என்பது தமிழகத்தின் துயரம் - எடப்பாடி பழனிசாமி

சேலம்: கடந்த ஆறு மாத தவெக ஆட்சி தமிழகத்தின் துயரம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம், சங்ககிரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. தமிழக வெற்றிக் கழகம், கடந்த 6 மாதங்களில் சிறப்பான ஆட்சியை தரவில்லை. ஒரு துயரமான ஆட்சியைத்தான் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள் நடக்காத நாளே இல்லை என்கிற அளவுக்கு செய்திகள் வந்து கொண்டுள்ளன.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில், ஒரு சிலவற்றைத் தான் முதலமைச்சர் விஜய் நிறைவேற்றியுள்ளார். இன்னும் பல வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. தமிழகத்திற்கு புதிதாக எந்த ஒரு பெரிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை. அதற்காக நிதியும் ஒதுக்கவில்லை.

தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள் குற்றங்களைத் தடுக்காத அரசாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உள்ளது. போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. நகரம் முதல் கிராமம் வரை போதைப்பொருள் விற்பனை நடந்து வருகிறது.

மாநிலத்தில் நடக்கும் கொலை மற்றும் குற்றச் சம்பவங்களுக்கு கஞ்சா போதை தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எடப்பாடியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. உடனடியாக அரசு, சட்ட விரோத லாட்டரி விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமார், மேகதாது அணை கட்டுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று அண்மையில் கூறியுள்ளார். இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. காவிரி நதி நீரை பொருத்தவரை, கீழ்ப்படுகை பாசனப்பகுதிகள் பாதிக்காத வகையில் மேல்படுகை பாசனப்பகுதிகளில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆனால், கர்நாடக முதல்வரின் பேச்சு குறித்து, குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை கொடுக்கவில்லை. காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை குறிப்பிட்ட காலத்திற்குள் முறையாக வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது. அந்த தீர்ப்புகளை அதிமுக அரசு பெற்று தந்தது. அதை முறையாக தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, அரிசி விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கு காரணம் அரிசி பதுக்கல் என்பது குறித்து அரசு தான் தெரிவிக்க வேண்டும்.

கர்நாடக மாநில அரசு, உரிய நேரத்தில் காவிரியில் தண்ணீரை திறந்து விடாததால், தமிழ்நாட்டில் நெல் பயிரிடும் டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி குறைந்துள்ளதும் அரிசி விலை உயர்வுக்கு ஒரு காரணம். தவெக அரசின் ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு சரியில்லை என அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரே தெரிவித்துள்ளனர்

முந்தைய ஆட்சிகளில், தீபாவளி தினத்தன்று படுகொலை நடக்கவில்லையா என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறுகிறார். கடந்த ஆட்சிக் காலத்தை ஒப்பிட்டு பேச வேண்டியது இல்லை.

தற்போதைய சட்டம், ஒழுங்கு சீர்கேட்டிற்கு இந்த அரசு முழு பொறுப்பேற்று குற்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு காவல் துறையினரை கண்டால் அச்சமில்லை. ரவுடிகளால் எஸ்.எஸ்.ஐ படுகொலை செய்யப்படுகிறார். இதை அரசு தடுக்க வேண்டும்.

சென்னையில் நீதிபதிகள், அரசு உயர் அலுவலர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலையில் நேற்று பட்டப்பகலில் படுகொலை நடந்துள்ளது. முதலமைச்சர் விஜய், அண்மையில்தான் அந்த பகுதியில் குடியேறி இருக்கிறார். அவர் வீடு அமைந்துள்ள பகுதியிலேயே இந்த கொலை நடந்துள்ளது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்.

தொகுதியின் குறைகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றோம். ஆனால், புகார் தெரிவித்தவரிடம் துணை சபாநாயகர் நடந்து கொண்டது தவறு. பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ தவறான குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்திலும், உண்மை கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கையை முதலமைச்சர் விஜய் எடுப்பார் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0