வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு நிலுவைத் தொகைக்கான வட்டி தள்ளுபடி

Nov 12, 2026 - 21:49
 0
வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு நிலுவைத் தொகைக்கான வட்டி தள்ளுபடி

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு நிலுவைத் தொகைக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தவணைக் கொள்முதல் திட்டங்களில் மனை, வீடு மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று 31.03.2026-க்குள் தவணைக் காலம் முடிவுற்ற திட்டங்களில், நிலுவைத்தொகை செலுத்தத் தவறிய ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறும் வகையில் வட்டித் தள்ளுபடி செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தவணைமுறைத் திட்டத்தின் கீழ் மனை, வீடு மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று தவணைக் காலம் முடிவுற்ற பின்பும் விற்பனைப் பத்திரம் பெறாமல் சுமார் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் உள்ளனர்.

இவர்கள் முழுத்தொகையையும் செலுத்தாமல் விற்பனைப் பத்திரம் பெறமுடியாமல் உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுரையின்படி, ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனைப் பத்திரம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்திற்கான வட்டிச் சுமையைக் கருத்திற்கொண்டு விற்பனைப் பத்திரம் விரைவாக வழங்குவதற்கு ஏதுவாக வட்டித் தள்ளுபடி செய்வதாக 2026-2027ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரால் சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தவணைக் கொள்முதல் திட்டங்களில் மனை, வீடு மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று 31.03.2026-க்குள் தவணைக் காலம் முடிவுற்ற திட்டங்களில், நிலுவைத்தொகை செலுத்தத் தவறிய ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறும் வகையில், அத்தொகையினை ஒரே தவணையாகச் செலுத்துபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத வட்டித் தள்ளுபடியும், வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டித் தள்ளுபடியும் மற்றும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தில் வசூலிக்கப்படும் தொகைக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 5 மாதத்திற்குண்டான வட்டித் தள்ளுபடியும் செய்து விற்பனைப் பத்திரம் வழங்கப்படும்.

இந்தத் திட்டம் ஓராண்டு காலத்திற்கு சிறப்புத் திட்டமாகச் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம், சுமார் 6,496 ஒதுக்கீடுதாரர்கள் பயன் பெறுவார்கள். இதனால், வாரியத்திற்கு சுமார் 92.39 கோடி ரூபாய் வருவாய் வருவதுடன் இச்சிறப்பு வட்டி சலுகையின் மூலம் ஒதுக்கீட்டாளர்களுக்கு 18.45 கோடி ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0