தவெகவில் கட்சி பதவிக்கு ரூ.10 லட்சம்? - மீண்டும் வெளியான ஆடியோவால் பரபரப்பு
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவிக்காக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்படும் மற்றொரு ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக மதுரை மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட, பகுதி மற்றும் வட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தவெகவில் கட்சிப் பதவிகளைப் பெறுவதற்கு பணம் கேட்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
முதல் ஆடியோவில் ரூ. 15 லட்சம் பேரம் என புகார்
முன்னதாக, மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவின் உதவியாளர் கனி என்பவர் கட்சிப் பதவி தொடர்பாக ரூ.15 லட்சம் கேட்பதாக கூறிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, தனது கவனத்திற்கு இந்த புகார் வரவில்லை என்றும், புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அதேபோன்று பதவிக்கு பணம் கேட்பதாக இரண்டாவது ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பணம் வாங்கி பதவி?
வெளியான ஆடியோவில் பேசும் நபர், “நான் மதுரையைச் சேர்ந்த ஜோயல். கட்சிக்குள் பகிர்ந்துகொண்ட பதிவு பொதுவெளிக்கு வந்துவிட்டது. இந்த விவகாரத்தால் நட்பும், உறவுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. எனது பணத்தைச் செலவிடத் தயாராக இருந்தாலும், மற்றவர்களின் பணத்தைப் பெற விரும்பவில்லை. மதுரையில் பணத்தை மையமாகக் கொண்டு அரசியல் நடைபெறுகிறது. மேலும், கட்சிப் பதவிக்காக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதாக எனக்கு தகவல் வந்துள்ளது. பணம் கொடுத்துத்தான் பதவி பெற்றதாகக் கூறப்படும் நிலை வெட்கக்கேடானது.
எம்.எல்.ஏ முஸ்தபா மீது நேரடிக் குற்றச்சாட்டு
இந்த விவகாரத்தில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு தொடர்பு உள்ளது. பதவிகளுக்குப் பணம் தொடர்பான பேச்சுகள் எழுந்தபோதே, அவற்றைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். பணம் குறித்துப் பேச வேண்டாம் எனக் கட்சியினருக்கு அவர் அறிவுறுத்தியிருக்கலாம். இந்த விவகாரத்தால் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு எம்.எல்.ஏ முஸ்தபாவே காரணம். மேலும், பணம் கட்டுக்கட்டாகக் கைமாறியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றைப் பாதுகாப்பாக வைத்துள்ளேன்.
ஆடியோ - வீடியோ பதிவுகள் இருப்பதாக பேச்சு
இந்த விவகாரம் தொடர்பாகத் என்னிடம் 100 ஆடியோக்கள் மற்றும் வீடியோ பதிவுகள் உள்ளன. தேவைப்பட்டால் அவற்றை தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளரிடம் வழங்கவும், இல்லையெனில் மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்கவும் தயாராக இருக்கிறேன். ஊழலை ஒழிப்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியிருக்கும் நிலையில், கட்சிக்குள் இத்தகைய பணப்பரிமாற்றப் புகார்கள் எழுவது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்குமா?
மதுரையில் தவெகவில் கட்சிப் பதவிகளைப் பெறுவதற்குப் பணம் கேட்கப்பட்டதாகக் கூறப்படும் முதல் ஆடியோவைத் தொடர்ந்து, தற்போது எம்.எல்.ஏ முஸ்தபா மீது நேரடியாகக் குற்றம்சாட்டும் இரண்டாவது ஆடியோ வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோ பதிவுகள், கட்சிக்குள் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், புகார்கள் குறித்து கட்சித் தலைமை விசாரணை நடத்துமா? காவல்துறையிடம் புகார் அளிக்கப்படுமா? குற்றச்சாட்டுகளுக்கு எம்.எல்.ஏ முஸ்தபா தரப்பில் என்ன விளக்கம் அளிக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0