மதுரையில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

Oct 26, 2026 - 22:53
 0
மதுரையில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

மதுரை,
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை நெல்பேட்டை மற்றும் மாட்டுத்தாவணி ஆகிய முக்கிய மொத்த விற்பனைச் சந்தைகளுக்கு வரும் வெங்காய மூட்டைகளின் எண்ணிக்கை பாதியாக சரிந்துள்ளது. வழக்கமாக தினசரி 2,000 மூட்டைகள் வரை வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது வெறும் 900 மூட்டைகள் மட்டுமே சந்தைக்கு வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 100-லிருந்து ரூ. 150 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் (பல்லாரி) ரூ. 58-லிருந்து ரூ. 76 ஆக அதிகரித்துள்ளது. தினசரி சமையலுக்கு அத்தியாவசியத் தேவையான வெங்காயத்தின் இந்த கிடுகிடு விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களின் மாதாந்திர பட்ஜெட்டைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

எனவே, வெளிச்சந்தையில் நிலவும் இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நியாய விலைக்கடைகள் (ரேஷன் கடைகள்) மூலம் ரூ. 35 மானிய விலையில் வெங்காய விநியோகத்தை அனைத்துப் பகுதிகளுக்கும் தடையின்றி விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0